News

Follow Us

தமிழக தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தற்போது கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை மீது பொய் செய்தி பரப்பியதாக தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த சண்டையின் காரணமாகவே கோமதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்த காரணத்தால் பொய் செய்தி பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அண்ணாமலை, ’திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன். திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ.

பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத் தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? தமிழக முதல்வர் என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார். இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் காவல் துறை இப்போது கைது செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link