News

Follow Us

தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களையும் தெரிவிக்க வேண்டும். அதன்படி வெளியாகியிருக்கும் சொத்துப் பட்டியல் சாதாரண மக்களை நிலைகுலைய வைக்கிறது.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரின் சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன

சிவகங்கையில் போட்டியிடும் பி.சிதம்பரத்தின் மகன் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திற்கு 127 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அதேபோல், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு 19 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், அவரது கணவருக்கு ரூ.3.92 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு ரூ.46.20 கோடி சொத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.21.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.14.03 கோடி அசையும் சொத்து, ரூ.7.89 கோடி அசையா சொத்து; தனது குடும்பத்துக்கு ரூ.5.13 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாகவும் அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு ரூ.48.18 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ரூ.6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ கூட்டணியில் போட்டியில் ஏ.சி.சண்முகத்தின் அசையும் சொத்து : ரூ.36,47,81,921, மனைவி அசையும் சொத்து: ரூ.37,40,50,259, வேட்பாளர் அசையா சொத்து : ரூ.7,43,87,417, மனைவி அசையா சொத்து ரூ.16,02,25,167 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் (இமகமுக) வேட்பாளர் தேவநாதன் 400 கோடி ரூபாய் கணக்கு காட்டியிருக்கிறார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனின் பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.88 லட்சத்து 57 ஆயிரத்து 31 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. எல்.முருகன் பெயரில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 65 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link