News

Follow Us

ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையில் காரசார மோதல் நடந்துகொண்டு இருக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டி என்பதிலிருந்து நழுவி இரண்டு முனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கினார் சீமான், ‘ அண்ணாமலை.. ஏதோ தமிழ்நாட்டுல ஆடிட்டு இருக்க. அதிகாரத் திமிருல ஆடுற. நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், என் கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதிப் பாரு. தைரியம் இருந்தால் ஒரு பொது தொலைக்காட்சிக்கு வா. நானும் வர்றேன். என்ட்ட நீ ஆயிரம் கேள்வி கேளு. நான் பதில் சொல்றேன். பதிலுக்கு ஒரே ஒரு கேள்விதான் நான் உன்ட்ட கேட்பேன். தமிழ்நாட்டிற்கு பாஜக எதுக்கு வேணும்னு நீ பதில் சொல்லிரு. நான் அரசியலை விட்டே விலகிடுறேன்.

உன் உடம்புல தூய தமிழ் ரத்தம் ஓடுதா.. போய் சோதிச்சிட்டு வா. தமிழ்நாடு நோடில்லா.. காவிரி நோடில்லானு பேசுனியே.. தமிழ்நாட்டுல உனக்கு ஓட்டில்லானு மக்கள் சொல்லப் போறான்.. பாத்துக்குட்டே இரு. இன்னும் இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு என்று இன்னும் பழைய செருப்பையே சீமான் தூக்கிட்டு வர்றாரே என அண்ணாமலை சொல்லி இருக்காரு. நான் ஏன் தூக்கிட்டு திரியுறேனு தெரியுமா?

உங்களை மாதிரி ஆளுங்க திரும்பவும் இந்தி, சமஸ்கிருதம்னு பேசிட்டு வந்தா அந்த பழைய பிஞ்ச செருப்பாலையே அடிக்கதான் நான் தூக்கிட்டு வர்றேன். சேட்டை பண்ணிட்டு திரியுற நீ… தமிழ்னா என்னனு தெரியுமா உனக்கு. தமிழன்னா யாருனு தெரியுமா உனக்கு. என் மொழி வரலாறு இன வரலாறு தெரியுமா உனக்கு. முதல்ல போய் படி. நீ ஐபிஎஸ் படிச்சு எழுதுனியா.. பாத்து எழுதுனியா? என்ன விளையாட்டு காட்டிட்டு திரியுற நீ. பாத்து இருந்துக்கோ. இவ்வாறு சீமான் பேசினார்.

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டு இருக்கும் சூழலில் தமிழக தேர்தல் களம் சூடாகி வருகிறது. இப்போது தமிழகத்தில் வெளிப்படையாக நான்கு அணிகள் தேர்தலில் நிற்கின்றன.

 ஸ்டாலின் அணியில் திமுக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில், அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிரேமலதா 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அண்ணாமலை அணியில் ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்துள்ளனர். பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதோடு, இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் தாமரைச் சின்னம் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஓ. பன்னீர் செல்வம், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது. தமிழகத்தின் தேர்தல் களம் 4 முனைப் போட்டி கொண்டதாக இருந்தாலும், இப்போது போட்டி ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இடையிலாக மாறியிருக்கிறது. இரண்டாவது இடத்துக்காக போட்டியிடும் பா.ஜ.க. இப்போது நாம் தமிழருடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்துக்கு முந்தத் துடிப்பதுதான் பரிதாபம்.

நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தே போட்டியிடுகிறது. அதேநேரம், எப்படியாவது ஜெயித்துவிடலாம் என்று பிரதமரும் அமித்ஷாவும் மாறி மாறி தேர்தல் பிரசாரம் செய்வதை பார்க்கும்போது பரிதாபமே வருகிறது.  தேர்தல் வரட்டும், விடை தெரியட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link