News

Follow Us

கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சசிகலா வெளிப்படையாக பங்கெடுக்காமல் இருந்ததற்கு பிரதமர் மோடியின் அறிவுறுத்தலே காரணம் என்று கூறப்படும் நிலையில், அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா மேற்கொண்டுள்ள புதிய திட்டத்திற்கு பா.ஜ.க.வின் ஆதரவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த சசிகலா, ’வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார்’ என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குறிப்பிட்டார். அதாவது தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கோபம் அடைவார்கள் என்றும் அதனால் எழும் புதிய அலையை சாதகமாக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

இதன்படி சசிகலா ஒரு புதிய வியூகம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, விண்ணப்பம் ஒன்றை அச்சடித்து தனது ஆதரவாளர்களிடம் வழங்கி, அதிமுகவினரிடம் கொடுத்து பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த விணப்பத்தில் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 1-1-2017 அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுபவராக இருந்தால், அந்த அமைப்பின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

கட்சியினர் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சசிகலாவின் முகாம் அலுவலகமான 95, ஜெயலலிதா இல்லம், போயஸ் கார்டன், சென்னை 86 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அனுப்ப முடியாதவர்கள் இத்துடன் இணைத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி தங்களது விவரங்களை அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து விடலாம் என்பது நடக்கவில்லை என்பதால் இனி, நேரடியாக கட்சியை கைப்பற்றும் முயற்சியை எடுக்கப்போவதற்கான அறிகுறி. இதற்கு டெல்லி பா.ஜ.க. முழு ஆதரவு கொடுத்திருக்கிறது’ என்கிறார்கள்.

இதற்காகவே எடப்பாடி பழனிசாமி அவசரம் அவசரமாக சென்னையில் ஒரு மீட்டிங் போட்டு சென்னை நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார், ‘அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியதை ஒரு வெற்று பேப்பராகத்தான் பார்க்க முடியும். அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது…’ என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்டம் சூடு பிடிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link