News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

’அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்திருக்கும் விவகாரம் பாமகவினரை அதிர வைத்திருக்கிறது.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது.

உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில் தான் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே தன்னை தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள், வன்னிய மக்கள், ஒட்டுமொத்த பிற சமூகத்தினர், பிற கட்சியினர் எல்லாம் அன்புமணியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டார்கள்.

அன்புமணி எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நான் ஜெயிப்பேன். ராமதாசை தோற்கடிக்க யாராலும் முடியாது. இனி என்னிடம் எதுவுமே இல்லை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டாய். ஆனால் வியர்வை சிந்தி, 46 ஆண்டுகாலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று என் மக்களை சந்தித்து பேசி நம் சமூகத்தின் நிலைமையை கூறி வளர்த்த எனது கட்சியை நீ முழுமையாக பறிக்க நினைக்கிறாய்.

அந்த உரிமையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கு உதவியாக எனது மூத்த மகள் காந்தி செயல் தலைவராக நியமனம் செய்துள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது உனது தலைவர் பதவி முடிந்து விட்டது. ஆனால் ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார்.

என் கூட இருப்பவர்களை விலைக்கு வாங்க நினைக்கிறாய். ஆனால் இனி வெல்லப்போவது ராமதாஸ் தான். நீ எல்லாவற்றிலும் தோற்றுவிட்டாய். எனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. எனது உழைப்பை இனி யாரும் திருட முடியாது.

அன்புமணியை படிக்க வைத்து, மருத்துவராக்கி, மத்திய அமைச்சராக்கி, கட்சிக்கு தலைவராக்கியது என பல தவறுகளை செய்துவிட்டேன். தற்போது என்னோடு மோத நினைக்கிறார். அது எப்போதும் நடக்காது. நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். இனி அன்புமணி அரசியல் பயணம் முடிந்து விட்டது. இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன்” என்று கொதித்துள்ளார்.

இந்த பேச்சு அன்புமணியை அலறவைத்துள்ளது. இது தொடர்வது என்.டி.ஏ. கூட்டணிக்கு ஆபத்து. எனவே, ராமதாஸ் எல்லை மீறிப் போவதை பாஜக வேடிக்கை பார்க்குமா அல்லது தடுத்து நிறுத்துமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link