Share via:
தமிழகத்தில் எந்த ஒரு முதல்வரும் பயன்படுத்தாத கோட் சூட் போட்டு
கோட்டைக்கு வந்தார் முதல்வர் விஜய். அதேபோல், வெள்ளிக் கிழமைகளில் தமிழ் கலாச்சாரத்தை
எடுத்துக்காட்டும் வகையில் பட்டு வேட்டி, சட்டையில் அசத்தினார்.
இதை எல்லாம் திமுகவினர் கிண்டல் செய்தார்கள். அதாவது சினிமா கெட்டப்,
எக்கச்சக்க செலவு என்று ஒவ்வொரு நாளும் பேசிவந்தார்கள். இதற்கெல்லாம் பதிலளிப்பது போன்று
எனக்கு சிம்பிளாகவும் வரத் தெரியும் என்று நேற்றைய தினம் சிறைச்சாலை விசிட்டில் காட்சியளித்தார்
விஜய்.
அதாவது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய பழைய வெள்ளை சட்டை,
பேண்ட், ஒரு சாதாரண செருப்பு என்று சிம்பிளாக வலம் வந்தார். புழல் மத்திய சிறைச்சாலையை
பார்வையிட்டு, சிறைவாசிகளிடம் தேவைகளை கேட்டறிந்தார். இதையடுத்து சென்னை புழல் காவல்நிலையத்தை
ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் பேசினார்.
ஒரு முதல்வர் என்ற பந்தா இல்லாமல் இன்ஸ்பெக்டர் முன்பு ஒரு சாதாரண
குடிமகன் போன்று அமர்ந்து அவர் பேசியது, பெரும் வைரலாகிவருகிறது. அரசு பணத்தை தொடமாட்டேன்,
அப்படி தொட்டவர்களை விட மாட்டேன் என்று பேசினார் விஜய். அடுத்து விரைவில் அரசியல் கைதிகள்
சிறைக்குச் செல்ல இருப்பதால், முன்கூட்டியே அவர்களுடைய வசதிகளைப் பார்த்து தெரிந்துகொண்டார்
என்கிறார்கள்.
விஜய் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் தி.வேல்முருகன்,
‘’முதல்வர் விஜய் அவர்கள், புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு,
உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது. அந்தச் சிறைக்குள்
நீண்டகாலமாக வாடும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த
ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வு வழிவகுக்க வேண்டும்.
பல்வேறு வழக்குகளின் கீழ் நீண்டகாலமாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களின்
நிலையும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக சிறைவாசம்
அனுபவித்து வரும் அவர்களின் வாழ்க்கையை மேலும் சிறைக்குள் முடக்காமல், நல்லெண்ணத்தின்
அடிப்படையில் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் மீதான வழக்குகளை இரத்து
செய்து, அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து கண்ணியமான வாழ்க்கையை
வாழ்வதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, வயது மூப்பை அடைந்து, உடல் வலிமையை இழந்து, தங்களுடைய
அன்றாடத் தேவைகளைக்கூட தாங்களே நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் சிறைவாசிகளின்
நிலை மனிதநேயக் கண்ணோட்டத்தில் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்…’’ என்று கோரிக்கை
வைத்திருக்கிறார்.