Share via:
திமுகவில் இப்போது 77 மாவட்டக் கழகங்கள் உள்ளன. இதை 110 மாவட்டக்
கழகங்களாக மாற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம்
புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று உடன்பிறப்புகள் குஷியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2018-ஆம் ஆண்டு
இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது,
“நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப
நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத
விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்”
எனப் பேசியிருந்தேன். கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி
ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன்.
கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக்
கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு
அழைத்துச் செல்வேன்’’ என்று உறுதி கொடுத்துள்ளார்.
கழக மாவட்ட
மறுவரையறையில் தலைநகர் சென்னையை 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும்
வடசென்னை மாவட்ட பிரிப்பு பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திருவெற்றியூர்,
மாதவரம் தொகுதிகளை
சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை
சென்னை வடக்கு மாவட்டமாகவும் துறைமுருகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை
சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இது சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரின் அதிகாரத்தைப் பறிக்கும்
செயல். அதேநேரம், தேர்தலுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய மாற்றம். எந்த சீனியரின்
பதவிக்கும் ஆபத்து இருக்காது, ஆனால் அதிகாரம் குறையும் என்கிறார்கள்.

