Share via:
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின்
கனவு. ஆனால், அதற்குரிய மைதானங்கள், பயிற்சி மையங்கள், தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள்
நம்மிடையே இல்லை என்பதுதான் மிகப்பெரும் குறை.
இந்த நிலையில், வரும் 2036 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. அப்படி இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்
பட்சத்தில், தமிழ்நாடு பதக்கம் வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே தொலைநோக்குப்
பார்வையில் செம்மஞ்சேரி ஒலிம்பிக் சிட்டி அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையை விளையாட்டுத் தலைநகராக மாற்றும்
வகையில் செம்மஞ்சேரியில்
124 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைகிறது ஒலிம்பிக்
சிட்டி. முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்தபடி ஒருங்கிணைந்த விளையாட்டு நகரம் உருவாக்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள் , வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி , தேசிய, சர்வதேச போட்டிகளை நடத்தும் வசதிகள் இருக்கும்.
தமிழ்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படுள்ளது.
தமிழ்நாடு கடந்த 100 ஆண்டுகளில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லவில்லை. அந்த குறையை போக்க, 46 விளையாட்டுகளுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கிராமங்களில் 8 வயது முதல் 18 வயது வரை உள்ள திறமையான குழந்தைகளை கண்டுபிடித்து, பயிற்சி கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை மட்டும் இல்லாமல், கோவை, திருவண்ணாமலை, நாகை, பரமக்குடி என பரவலாக மையங்கள் அமைப்பதன் மூலம், கிராமப்புற வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்கு 38 விளையாட்டு விடுதிகள், 500 மைதானங்கள் மேம்பாடு என அரசு பெரிய திட்டம் வைத்துள்ளது. இதனால் வெளிநாடு போகாமலேயே, தமிழ்நாட்டிலேயே சர்வதேச தரத்தில் பயிற்சி, மருத்துவம், உணவு, தங்குமிடம் கிடைக்கும்.
அதோடு
பயிற்சியாளர், விளையாட்டு மருத்துவம், விளையாட்டு அறிவியல், மேலாண்மை என ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். செம்மஞ்சேரிக்கு பெரிய விளையாட்டு நகரம் வருவதால், சாலை, போக்குவரத்து, வணிகம், ரியல் எஸ்டேட், சுற்றுலா அனைத்தும் வளரும்.
சர்வதேச போட்டிகளை நடத்தும் போது, தமிழ்நாடு உலக வரைபடத்தில் இடம் பிடிக்கும். விளையாட்டு சுற்றுலா மூலம் வருமானம் பெருகும். சென்னையை மட்டும் நம்பாமல், மாவட்டங்களிலும் விளையாட்டு வசதி வருவதால், அந்த பகுதி பிள்ளைகளும் ஒலிம்பிக் கனவு காணலாம்.

