News

Follow Us

டார்ச் லைட் உடைத்துப் போட்டு ஆவேசம் காட்டிய மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்.

     

 

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பேசிய கமல்ஹாசன் மோடி மீது தீவிரமாக அட்டாக் செய்தார். அவர் பேசுகையில், ‘நான் இந்த தேர்தலில் நிற்காமல் தியாகம் பண்ணிவிட்டதாக சொல்கிறார்கள். இது தியாகம் அல்ல, வியூகம். தமிழ் நாடு காக்கும் வியூகம். இரண்டு சீட் வாங்கி நிற்பது பெரியது அல்ல, யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். பதவி முக்கியம் அல்ல, நாட்டு நலனே முக்கியம்.

இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி என்ற வெள்ளைக்காரன் கம்பெனி வந்து நம்மை சுரண்டிவிட்டுச் சென்றார்கள். இப்போது மேற்கு இந்தியாவில் இருந்து ஒரு கம்பெனி வந்திருக்கிறது. காந்தி பிறந்த குஜராத்திலிருந்து அந்த கம்பெனி வந்திருக்கிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி மறுக்கிறது ஒன்றிய அரசு. கொடுக்கவேண்டியதை கேட்டால், கொடுத்ததை பிச்சை என்கிறது ஒன்றிய அரசு. தொடர்ந்து பொய் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்கிறார் பிரதமர். பொது சிவில் சட்டத்தில்  எல்லோருக்கும் இடம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு இல்லை, அதை விட்டுவிடுங்கள், தமிழனை பிடிக்கும் என்று சொல்கிறீர்களே, எங்கள் இலங்கை தமிழனுக்கு அதில் இடம் இல்லை.

தி.மு.க. அரசை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்.? இங்க இருக்கிற ம்திய உணவுத்திட்டம், காலை உணவுத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், அந்த திட்டத்தை நாங்கள் முதலில் சொன்னோம். அதை சொல்வதை விட செயல்படுத்துவது முக்கியம். இங்கு அதை நிறைவேற்றியது என் சகோதரர். நீங்கள் அதை செயல்படுத்தி இருந்தால் உங்களையும் மதித்திருப்போம்.

இங்குள்ள மதிய உணவுத் திட்டத்தை, காலை உணவுத் திட்டத்தை ஏன் வட நாட்டில் உங்களால் செய்ய முடியவில்லை. உங்களிடம் இருக்கும் 7 ரூபாயை வைத்து பீகாரில் இதை செய்யுங்களேன். அதை விட்டுவிட்டு எங்களை கிண்டல் செய்யாதீர்கள்.

கவர்னரை அனுப்பி இந்த ஆட்சியின் மீது கை வைக்கிறார்கள். இந்தி திணித்து மொழியில் கை வைக்கிறார்கள். 29 பைசா மட்டுமே தந்து நம் அடி வயிற்றில் கை வைக்கிறார்கள். நம் மீது கை வைப்பவர்களுக்கு எதிராக ஒரு விரல்போதும். கை வைத்தால் மை வைப்போம்’ என்று ஆவேசமாக குரல் கொடுத்தார். அதேநேரம், உதயநிதி பற்றியும் ஸ்டாலின் பற்றியும் பாராட்டிப் பேசவில்லை என்று தி.மு.க.வினர் வருத்தப்படுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link