News

Follow Us

ஒரே ஒரு சீட் கூட வாங்காமல் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இலவசமாக பிரசாரம் செய்துவருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் கமல் பேச்சு எப்படி என்று மக்கள் நீதி மய்யத்தினரிடம் பேசினோம்.

‘’ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமல் பேசியது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பா மோடியை வெளித்து வாங்குகிறார்.

திருச்சியில் பேசியபோது, ’இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் ஊர் திருச்சி. சைவ, வைவண,  இஸ்லாமிய, சீக்கிய என பல மதங்களும் புழங்கிய ஊர் இது. தமிழ், தெலுங்கு, இந்தி, சௌராஷ்டிரா என எல்லா மொழிகளையும் சந்தோஷமாகப் பேசும் ஊர் இது. நாடு முழுவதும் மதக் கலவரங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அதை குறைவு. குறிப்பாக, திருச்சியில் அவை அறவே இல்லை என்றால் அது மிகையாகாது.

 

நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே உங்கள் மனதில் `சீட்’ கொடுத்திருக்கிறார்கள்.  எனக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, வீட்டுப் பத்திரத்தை, சாவியைக் கொடுத்து அனுப்பியவர்கள் தமிழகத்தில் உண்டு. உங்கள் மனங்களில் மட்டுமல்ல, இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு. அதனால்தான், தொலைக்காட்சி மூலமாவது உங்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சியில் பேசுவது, ஆயிரம் கூட்டத்தில் பேசிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தமிழகம் மற்றும் இந்தியா மீது எனக்கு உ ள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

அண்ணன்-தம்பியை மோதவிட்டு, வேடிக்கைப் பார்ப்பது அரசியல் தந்திரம். அதுதான் இன்று நிகழ்கிறது. பண்பாட்டுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை போன்றவற்றைக் கிளப்பிவிட்டு, அரசு செய்யும் தவறுகளைப் போர்த்தும் போர்வையாக அவற்றைப் பயன்படுத்துகின்றனர.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை எல்லாம் மக்களுக்காக சேவையாற்றவில்லை. வேறு யாரோ வேட்டை நாய்போல பயன்படுத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது. ஜிஎஸ்டியால் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. எதையாவது செய்து, தமிழகத்தை வளைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அது இங்கு நடக்காது…’ என்றெல்லாம் ஆவேசமாகப் பேசுகிறார்.

மக்கள் கமல்ஹாசனின் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். எங்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் அவர் சினிமா வேலைக்குப் போய்விடுவார். நாங்கள் கட்சிக்காரர்கள் என்று தி.மு.க.வினரிடம் போய் எந்த உதவியும் கேட்க முடியாது. இதுகுறித்து கமலிடமும் பேச முடியாது. நாங்களும் வேடிக்கை பார்க்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலாவது எங்களுக்கு நல்ல வாய்ப்பு வாங்கித் தருவார் என்று நம்புகிறோம்’ என்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link