News

Follow Us

’இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்… பெருமையோடு சொல்கிறேன்… தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டு ஆட்சி நிறைவு குறித்துப் பேசியிருக்கிறார்.

கடந்த 07-05-2021 அன்று முதல்முறையாக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளுக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் தி.மு.க இன்று அடியெடுத்து வைத்திருக்கிறது.

அதுகுறித்து ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன்… பெருமையோடு சொல்கிறேன்… தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு” ட்வீட் செய்து வீடியோ பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், “முத்துவேல் கருணாநிதி எனும் நான் உங்களின் நல்லாதரவையும், நம்பிக்கையையும் பெற்று நம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறேன். இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் நான் செய்து கொடுத்த திட்டங்கள் நன்மைகள் என்னென்ன என்பது தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட பயனடைந்த மக்களே செல்வதுதான் உண்மையான பாராட்டு.

எப்போதும் நான் சொல்வது இது எனது அரசு அல்ல நமது அரசு. நமது அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்வேன்” ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், திமுக ஆட்சி எப்போதும் மக்கள் நல திட்டங்கள் கொண்டு வருவதில் உலகத்திற்கு முன்னோடியாக இருக்கும், ஆனால் களத்தில் திமுகவின் அரசு நிர்வாகம் சரியில்லை எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம். அடிப்படை சான்றிதழ் பெறுவதற்கு கூட மக்களிடம் லஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள் கொடுக்காதவர்களின் மனு கிடப்பில் போடுகிறார்கள் என்றும் பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன.

அதைவிட, மூன்றாண்டு ஆட்சிக்கு கஞ்சாவே சாட்சி என்றும் எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. சாதனையும் வேதனையும் நிறைந்த ஆட்சியாகவே கருதப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link