News

Follow Us

இந்த தேர்தலிலும் தனக்கு நிச்சயம் சீட் உண்டு என்ற நம்பிக்கையுடன் இருந்தவர் ஈரோட்டை சேர்ந்த ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி. இந்த முறை துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வைகோ சொன்ன நேரத்தில், ‘அப்படியென்றால் இரண்டு சீட் கேளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு சீட் அதுவும் துரை வைகோவுக்கு மட்டும் என்றதுமே கணேசமூர்த்தி மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று கடந்த 24-ம் தேதியன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்குச் சேர்ந்தனர். சுய நினைவு இல்லாமல் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.

கணேசமூர்த்தியின் சொந்த ஊரான, சென்னிமலையை அடுத்த குமாரவலசு கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என ஈரோடு போலீஸார் தெரிவித்தனர்.

இந்த மன அழுத்தம் காரணமாக, தனது வீட்டில் விஷ மாத்திரைகளை நீரில் கரைத்து குடித்துள்ளார். இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் கணேசமூர்த்தி என்று கூறப்படுவதை இன்று வைகோ மறுத்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘சென்னை தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் அணியில் இணைந்து திமுகவை வளர்த்தெடுக்க என்னோடு பாடுபட்ட காலங்கள் பசுமையாக இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. ஆதிக்க இந்தியை வேரோடு சாய்ப்பதற்காக ஆண்டு 65 இல் மாணவர் சேனை நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தில் என்னோடு களம் கண்ட வீர வேங்கைதான் சகோதரர் கணேசமூர்த்தி.

மதிமுக மலர்ந்த நேரத்தில் தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் என்னோடு கைகோர்த்துக் கொண்டு கழகத்தை தொடங்கவும், வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்புடன் செயலாற்றிய செயல் வீரர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.

ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளராக, கழகத்தின் பொருளாளராக – சட்டமன்ற உறுப்பினராக – நாடாளுமன்ற உறுப்பினராக பாராட்டத் தக்க வகையில் பணியாற்றியது மட்டுமல்ல, பொடா சட்டத்தில் என்னோடு 19 மாத காலம் சிறைவாசம் ஏற்ற கொள்கை மறவர்தான் சகோதரர் 

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது, “தமிழ்நாடே என் தாய்நாடு” என்று முழக்கமிட்டு பதவி ஏற்ற நிகழ்வு நம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தி, மதிமுகவுக்கு பெருமை சேர்த்தவர் சகோதரர் கணேசமூர்த்தி.

எதிர்பாரா சூழலில் துயர முடிவை மேற்கொண்டு, கோவை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுடனும், பதற்றத்துடனும் சென்றேன். அவரது மகன் கபிலன், மகள் தமிழ்ப்பிரியா ஆகியோரைச் சந்தித்து ஆறுதலை தெரிவித்தேன். மருத்துவர்களிடம் கணேசமூர்த்திக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தேன்.

“இதுமாதிரியான நிலையில், ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும்போதும் இரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். விஷ முறிவுக்கான சிகிச்சையும், எக்கோவும் கொடுக்கப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு எப்படியும் சகோதரர் கணேசமூர்த்தி உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்தான் நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்.

ஆனால் முடிவுகள் வேறாகவிட்டன. கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை மதிமுகவின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன்.

அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், மதிமுக கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறினார். அதோடு அவரது மன அழுத்தத்திற்கு சீட் கொடிக்காதது காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்திக்கு தனிப்பட்ட ஆதரவும் செல்வாக்கும் இருக்கிறது. ஆகவே, இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு சிக்கல் காத்திருக்கிறது என்கிறார்கள். அதேபோல் துரை வைகோவின் திருச்சி தொகுதியிலும் நிச்சயம் சிக்கல் உண்டாகும் என்கிறார்கள். ம.தி.மு.க.வுக்கு ஆதரவுள்ள தென் தமிழகத்திலும் தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைய வாய்ப்பிருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link