Share via:
தமிழகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் அனைத்து தேர்தல்களிலும்
மாபெரும் வெற்றிகளைப் பெறுவதற்கு, தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக
நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையுடன், சமூகநீதி
மற்றும் மதச்சார்பின்மையை முன்னிறுத்தி வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி வரும் இடைத்தேர்தலை கூட்டணி பலத்துடன் சந்தித்து
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், பனையூரில்
இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில்
நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு, ஒருங்கிணைப்புக் குழு
என்பன குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தற்போது 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற
கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்குப் பின்னர் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற
சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத இந்திய கம்யூனிஸ்ட்
மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று அழைப்பு
விடுத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தாங்கள் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான
கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருமாவளவன், ‘’இதுவரை ஆதரவுக் கட்சிகளாக இருந்த நாங்கள்,
இப்போது கூட்டணிக் கட்சிகளாகப் பரிணாமமடைந்துள்ளோம். மதச்சார்பின்மையும், சமூக நீதியும்
இந்தக் கூட்டணியின் முதன்மையான கோட்பாடுகள். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல; அரசமைப்புச்
சட்டம் முன்மொழியும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் தொலைநோக்கு பார்வையோடு இந்தக் கூட்டணி
உருவாக்கப்பட்டுள்ளது.” என்று கூறியிருக்கிறார்.
பிரதமர் வேட்பாளர் பற்றி இப்போது பேசுவதில்லை என்று கூட்டத்தில்
முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர், ‘’புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கான இடைத்தேர்தலை முன்னிட்டு
“மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், ஐயூஎம்எல் போன்ற கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி “மதச்சார்பற்ற
கூட்டணி” என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக்கொள்ளும் அடையாளமல்ல;
அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேசிய
அளவில் I.N.D.I.A. கூட்டணியில் இருக்கின்றனவா, இல்லையா? மாநிலத்திற்கு ஒரு கூட்டணி,
தேசிய அளவில் வேறு கூட்டணி — ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலைப்பாடா?
அதிலும், “பிரதமர் வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்குக்கூட பதில் சொல்ல காங்கிரஸ் தயங்குகிறது.
மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்களே தெளிவான பதிலைச் சொல்ல முடியாத
நிலை, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் முதுகெலும்பு இல்லாததை வெளிப்படுத்துகிறது. இலங்கைத்
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்கள்
வைகோவும் திருமாவளவனும். இன்று அதே காங்கிரஸுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? அன்று கொள்கை,
இன்று கூட்டணி அரசியலா?
, தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமையான காவிரி நீர் உரிமையையே
காங்கிரஸால் தமிழகத்திற்கு உறுதியாகப் பெற்றுத்தர முடியவில்லை. அப்படியிருக்கும்போது,
மாநில உரிமையை காப்பாற்றுவோம் என்று எப்படி மக்களிடம் கூற முடியும்? ஆக, இது உண்மையில்
மதச்சார்பற்ற கூட்டணியா? சமூகநீதிக் கூட்டணியா? மாநில உரிமைக்கான கூட்டணியா? என்ற கேள்விகளுக்கு
அவர்களிடமே தெளிவான பதில் இல்லை…’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.

