Share via:
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கபினி அணையிலிருந்து வினாடிக்கு
10 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட
உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு அளித்துள்ளது. இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி.
வில்சன் அவர்களால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத்தான் விஜய்
கட்சியினர் ஸ்டாலினை கிண்டல் செய்கிறார்கள்.
தவெகவினர், ‘’எங்க அண்ணன் ஆட்சியில் காவிரி நீர் வந்தே தீரும்.
இயற்கையும் ஆண்டவனும் அண்ணன் பக்கம் நிற்கிறார். மழை பெய்து தண்ணீர் வரப்போவது உறுதியானதும்
ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக திமுக உச்சநீதிமன்றம் போகிறது’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் அன்புமணி ராமதாஸ், ‘’காவிரியில் திறக்கப்பட்டுள்ள நீர்
இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா?
என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும்
என்பதைப் பொறுத்தே அமையும்.
கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும்,
நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும்,
2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து
கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும்
என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே
தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.
காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் சம்பா பருவத்திற்கு
தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு
விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது…’’ என்று கூறியிருக்கிறார்.
விவசாயிகளோ, ‘’கர்நாடகா தண்ணீரை திறந்துவிட்டது என்ற செய்தியை
மட்டும் கூறி பெருமை பேசுவதால் விவசாயியின் வயலில் நெல் விளையாது. குறுவை பருவம் காலம்
கடந்துவிட்டது. மே–ஜூன் மாதங்களில் விதைக்க வேண்டிய பயிர், ஆகஸ்டில் தண்ணீர் வருவதால்
உயிர் பெறுமா? தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா விவசாயிகளின் இழப்புக்கு
யார் பொறுப்பு? உரிய நேரத்தில் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து
காவிரி நீரை பெற்றிருக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.