Share via:
விஜய் கட்சியுடன் கூட்டணி என்று திருமாவளவன் கொடுத்த அறிவிப்புக்கு
தவெகவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார். அடுத்த நாள் முதல்வர் விஜய்யை
நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமும் கொடுத்தார். ஆனால், விடுதலைசிறுத்தைகள் அறிவிப்பை
விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.
விஜய் மட்டுமின்றி அவரது கட்சியினரும் திருமா அறிவிப்பை மதிக்கவே
இல்லை. அதனால், இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லாமல் வெளியிட்டதாக வருத்தப்படுகிறார்.
அதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கை, போராட்டங்களையும் விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே
இல்லை.
இடதுசாரிகளைக் குறிவைத்து உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் எதேச்சதிகாரச்
செயல்பாட்டிற்குப் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலாளர் அந்த பதவியில் நீடிக்கத்
தகுதியற்றவர். எனவே, தமிழக அரசே, உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடு என்று கம்யூனிஸ்ட்
கட்சி போராட்டம் நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடி தருவது போன்று, சட்டப்பேரவை தேர்தலின் போது இந்திய
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமாருக்கு அடுத்த பிப்ரவரி 27 வரை பதவி நீட்டிப்பு
கொடுத்துள்ளது விஜய் அரசு. அதாவது விசிக, கம்யூனிஸ்ட்களை கொஞ்சமும் மதிக்கவே இல்லை
என்று காட்டியிருக்கிறார் விஜய்.
அதனால் இப்போது திருமா அவரது பழைய பாணி அறிக்கையைக் கையில் எடுத்து
நியாயம் கேட்டுள்ளார்.
திருமாவளவன் அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள
மேலவளவு கிராமத்தில் நேற்று இரவு ‘விடுதலைக் களம்’ அருகே நின்று பேசிக்கொண்டிருந்த
விசிக இளைஞர்களை அதே ஊரைச் சார்ந்த சாதிவெறியர்கள் இருவர் இருசக்கர வண்டியில் வந்து
திடீரென அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். அங்கே இருந்த மூவரில் இருவர் தப்பிய நிலையில்,
செல்வம் என்கிற இளைஞர் படுகாயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கழுத்தை நோக்கி சாதிவெறியர்கள் ஓங்கி வெட்டியபோது அதனை கைகளால் தடுத்துள்ளார்.
இதனால் அவரது வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு, அதனை ஒட்டுவதற்கு
உரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் மதுரை மாநகர் செல்லூர் அருகேயுள்ள அம்பேத்கர் நகரில்
அழகர் என்கிற விசிக பொறுப்பாளரைச் சாதிவெறி கும்பல் இருட்டில் பதுங்கியிருந்து கொடூரமாகத்
தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடுவாளால் வெட்டியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுஉயிருக்கு
ஆபத்தான நிலையில் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடூரமான இந்த இரண்டு சாதிவெறியாட்டங்களிலும் தொடர்புடைய அனைவரையும்
கைது செய்து தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
விசிக, கம்யூனிஸ்ட்களை விஜய் கலாய்த்துக்கொண்டு இருக்கிறார் என்பது
கூட தெரியாமல், இந்த கட்சிகள் முட்டுக் கொடுப்பது செம காமெடி.
