Share via:
விஜய் அரசியலுக்கு வந்த நேரத்தில் தம்பி என்று பாசமாக அழைத்தார்.
அவர் கூட்டணிக்கு வரவில்லை என்றதும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலில் வழக்கம்போல்
ஒரு இடத்திலும் ஜெயிக்காமல் நாம் தமிழர் வாஷ் அவுட் ஆனது. அதிமுகவில் இருந்து ஆட்களைப்
பிடித்துவரும் விஜய் இப்போது சீமான் கட்சி நிர்வாகிகளையும் இழுக்கத் தொடங்கியிருக்கிறார்.
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக நாம் தமிழர் கட்சியின்
வழக்கறிஞர் பாசறை செயலாளர் சி.சங்கரை சீமான் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக விஜய் கட்சியில் இணைந்துவிட்டார். இந்த நிலையில் நாம் தமிழர்
கட்சியிலிருந்து பிரபல திரைப்பட இயக்குனர் மு. களஞ்சியம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவர்
எழுதியுள்ள கடிதத்தில், ’’மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள்
மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. மேடைகளிலும்
சமூக வலைத்தளங்களிலும் தம்பிகள் என்றழைக்கப்படும் நாதக தம்பிகள் மற்றும் நிர்வாகிகள்
செய்யும் வெறுப்பரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று கருத்துடையோரை நாகரீகமற்ற முறையில்
விமர்சிப்பது கட்சியின் நோக்கத்தையே சிதைக்கிறது.
மேலும், இதுபோன்ற தரம் தாழ்ந்த வெறுப்பரசியல் போக்குகளை கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டும் காணாமல் கடந்து செல்வது தனக்கு ஏமாற்றமளிக்கிறது. கட்சியின்
மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்ட காலம் உழைத்தவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்
தராமல், தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான போக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதை தட்டிக்கேட்க
முடியாத சூழல் நிலவுகிறது…’’ என்று சாடியிருக்கிறார்.
களஞ்சியத்தின் இந்த விலகல் நாம் தமிழர் கட்சியினரை அதிர வைத்துள்ளது.
அடுத்து விஜய் யாரை இழுக்கப்போகிறாரோ..?