Share via:
லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னைக்குத் திரும்பிய முன்னாள்
முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’
என்று முதல்வர் விஜய் பற்றி பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது
செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal
Intimidation): BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு
அவமதித்தல் (Intentional insult to provoke breach of peace): BNS 353(2) – சமூகங்களுக்கு
இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை
18) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சர்ச்சையான
பேச்சு: இந்த மேடையில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர்
விஜய் குறித்து ஒருமையில் விமர்சித்துப் பேசினார்.
“சட்டமன்றத்தை கூட்டும்போது பூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது;
உடைத்துவிட்டுதான் அனுப்பி வைப்போம், சட்டமன்றத்தைக் கூட்டிப்பார்” என்று முதலமைச்சருக்கு
கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை
ஏற்படுத்தியது.
முதலமைச்சரை பொதுவெளியில் அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்த மார்க்கண்டேயன்
மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட
காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், இன்று அதிகாலை விளாத்திகுளத்தில்
உள்ள மார்க்கண்டேயனின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு
தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட
உள்ளார்.
போலீஸ் வாகனத்தை மறித்துப் போராட முயன்ற ஆதரவாளர்களைக் காவல்துறையினர்
குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்திவிட்டு எம்.எல்.ஏ-வை அழைத்துச் சென்றனர். ஏற்கனவே
இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்று முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில்
தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக முக்கியப் புள்ளியான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனிமொழி எம்.பி., ‘’விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை
அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப்
பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்…’’ என்று கொந்தளித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு முதல் நாளே தலைவலி கொடுத்துள்ளார் விஜய்.
