News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தேர்தல் வந்தாலே சர்வேக்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. இன்று ஜூனியர் விகடன் இதழில் ஒரு சர்வே வெளியாகியிருக்கிறது. திமுக திணறுகிறது, அதிமுக பின்னேறுகிறது. விஜய் கட்சி ஜெயிக்காவிட்டாலும், அவருக்கு மாஸ் மவுசு என்று சர்வே வெளியிட்டுள்ளனர்.

அவர்களுடைய சர்வே படி, இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சூழல் உருவாகக்கூடும். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் என நான்கு முதல்வர் வேட்பாளர்கள் களம் காணும் சூழலில், த.வெ.க பிரிக்கும் வாக்குகளால், தகித்துப் போயிருக்கிறது தேர்தல் களம். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், விஜய் ஒரு அரசியல் புயல்.

எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 5.67 கோடி பேர். அதில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.89 கோடி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடி. மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கும் 18 -19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் இருக்கின்றனர். வழக்கமாக பதிவாகும் வாக்குகளைவிட, எஸ்.ஐ.ஆர் திருத்தத்திற்குப் பிறகு கூடுதலாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது.

மொத்தமாக, தி.மு.க கூட்டணி 121 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 83 இடங்களிலும், த.வெ.க மூன்று இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கின்றன. தி.மு.க கூட்டணிதான் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், தி.மு.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில், எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போவது, இது முதல்முறையல்ல. எப்போதெல்லாம் மூன்றாவதாக ஒரு சக்தி உருவெடுத்து தேர்தல் களம் புகுகிறதோ, அப்போதெல்லாம் எதிர்பாராத ரிசல்ட்டைத்தான் தந்திருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள். 2006-ல், முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க 8.38 சதவிகித வாக்குகளைப் பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றிபெற்றார். அவரது அரசியல் என்ட்ரியால் 96 சீட்டுகளில் சுருங்கிய தி.மு.க., அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மைனாரிட்டி அரசாங்கத்தைத்தான் நடத்தியது.

2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவாகி, 6.01 சதவிகித வாக்குகளைப் பிரித்தபோது, அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம், 89 எம்.எல்.ஏ-க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது தி.மு.க. இப்படி, மூன்றாவதாக ஒரு சக்தி களத்துக்குள் நுழையும்போது, வித்தியாசமான ரிசல்ட்டுகள் கிடைத்திருக்கின்றன. 2026 தேர்தலிலும் அதுதான் நடைபெறப் போவதாக நமது சர்வே முடிவுகள் சொல்கின்றன.

233 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், நமது சர்வேயில் 24.71 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முதல்முறையாக தேர்தல் களம் காணும் ஒரு புதிய கட்சி, ஒன்னேகால் கோடி வாக்குகளைத் தொடுவதென்பது பெரிய சாதனைதான். களத்தில் நாம் பார்த்தவரையில், சமூகங்களையும் தாண்டி விஜய்க்கு ஆதரவு இருப்பதை உணர முடிகிறது. வாழ்க்கையிலும் வேலையிலும் உணவிலும் புதுவிதமான அனுபவங்களைத் தேடும் இளைய தலைமுறையினர், அரசியலிலும் அதை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக வாய்த்திருக்கிறார் விஜய்.

தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மாறி, மாறி வாக்களித்து சலிப்பு தட்டிப் போயிருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் விஜய்க்கு வரவேற்பு இருக்கிறது. சீமானைவிட விஜய்யை மாற்றத்துக்கான சக்தியாகப் பார்க்கிறார்கள்.

அதேநேரம்,  தமிழகம் முழுவதும் 128 மாவட்டச் செயலாளர்களைப் போட்டு வைத்திருந்தாலும், வலுவான கட்டமைப்பு த.வெ.க-விடம் இல்லை. இதுவே அவர்கள் சறுக்கலைச் சந்திப்பதற்கு அடிப்படைக் காரணம். தமிழகமெங்கும் விஜய் பிரசாரம் சென்றிருந்தால்கூட, ஓரளவுக்கு சீட்டுகளில் வெற்றியைக் குவித்திருக்கலாம். அவரின் சொதப்பலான பிரசாரத் திட்டங்களால், கட்சியினரே சோர்ந்து போய்விட்டார்கள். வேட்பாளரின் முகத்தையும் தாண்டி, விஜய்க்கும் விசிலுக்கும் இருக்கும் மவுஸ்தான் த.வெ.க-வை ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் பெற வைக்கிறது என்கிறார்கள்.

இது தவெகவிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியிட்ட சர்வே. கண்டிப்பாக நாங்கள் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுகவினர் உறுதியாகச் சொல்கிறார்கள். அதேபோல் அதிமுகவும் 210 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link