Share via:
விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட திருமாவளவன்,
கடைசி வரை திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவில்லை. ஆனால், திமுகவுடன் மல்லுக்கட்டிய
காரணத்தால் அவருக்கு கடந்த முறை போன்று திமுக வேலை பார்க்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேசிய திருமாவளவன்,
‘’தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நடந்துள்ளது. இதில் வியப்படைவதற்கு
ஒன்றும் கிடையாது. சிறப்பு எஸ்ஐஆர் திருத்தம் மூலம், வாக்குப்பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையில்
மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதலாக
வாக்குப்பதிவு ஆகி இருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. இது உண்மை இல்லை.
ஒவ்வொரு 5 ஆண்டு தேர்தலுக்கு பின்பும் புதிய வாக்காளர்கள் 20 லட்சம்
பேர் வாக்காளர் பட்டியலில் இணைவார்கள். அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலில்
20 லட்சம் முதல் 25 லட்சம் வரை புதிய வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்கள் போட்ட
வாக்குகள்தான் கூடுதலாகி உள்ளன. இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடப்பது தான்.
இதில் புதிது எதுவும் இல்லை.
இந்த தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். இதை களத்தில் மக்களை நேரடியாக
சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்கிறோம். தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும்
என்று நான் எப்போதும் சொல்லவில்லை. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான்
சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜய் வாங்குகிற வாக்குகள் சதவீதத்தை
பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன்’’ என்று கூறினார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத எஸ்.எஸ்.பாலாஜி,
ஆளூர் ஷாநவாஸுக்கு விசிகவில் முக்கிய பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. தற்போது ஆளூர்
ஷாநவாஸ் மாநில முதன்மைச் செயலாளராகவும், எஸ்.எஸ்.பாலாஜியை பொருளாளராகவும் நியமனம் செய்து
கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாத சூழலில் இருவரும் மும்முரமாக தேர்தல்
பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆளூர் ஷாநவாஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
எஸ்.எஸ்.பாலாஜி தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். அதற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
