Share via:
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரிப்பட்டு வராது, இந்த
பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது என்பதாலே முந்தைய அரசுகள் நீதிமன்றத்தை
நாடின என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், விஜய் கர்நாடகா செல்வதும்
அங்கு முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, மேகதாது விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர்
டி.கே சிவகுமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இருவரும் கர்நாடகா தலைமை செயலகத்தில்
ஆகஸ்ட் 3, மதியம் 12 மணிக்கு சந்திக்கிறார்கள். பின்னர் இருவரும் மேகதாது செல்லவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.கே.சிவகுமார், ‘’ஆகஸ்ட் 3ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தில்
உள்ள காவிரி நீர்த்தேக்கப் பகுதிக்கும் விஜய் நேரில் சென்று கள நிலவரத்தைப் பார்க்க
வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன், அவரது ஆய்வுக்காக ஒரு ‘ஹெலிகாப்டரை’ ஏற்பாடு
செய்வதாகவும் நாங்கள் முன்வந்துள்ளோம், இறுதியில், முடிவெடுப்பது அவரைப் பொறுத்தது’’
என்று பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு கர்நாடக பக்கம் இருப்பதற்கு காரணம்
தெரியவந்துள்ளது. மத்திய நீர்வள அமைச்சகத்தின் இரண்டு இணையமைச்சர்களில் மூத்தவர் கர்நாடகாவைச்
சேர்ந்த சோமண்ணா. இரண்டு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை நீடிக்கும்போது அதில்
ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரை பிரச்னை தொடர்பான துறையிலேயே அமைச்சராக இருக்கிறார். எனவே
சோமண்ணாவை மாற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, விஜய் நம்பிக்கையுடன் கர்நாடகா
போகிறார். தண்ணீருடன் வருவாரா என்று பார்க்கலாம்.