Share via:
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெகவைச் சேர்ந்த லயோலா மணி நியமனம்
செய்யப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட
இந்த வாரியத்தின் முதல் தலைவராக அவரே இருந்தார். அப்படிப்பட்ட பதவிக்கு லயோலா மணியா
என்று கல்வியாளர்கள் அலறுகிறார்கள்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள
அரசாணையில், ‘தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணியை
அரசு நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள். அவரது நியமனம் தொடர்பான இதர விதிமுறைகள்
தனியாக வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
லயோலா மணிக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்
விஜய் வழங்கினார். பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி, தவெக பேச்சாளர்,
கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும்
பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பதவியை டம்மியாக்குவதற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில்
விஜய்யும் செயல்படுகிறார் என்று திமுகவினர் குமுறுகிறார்கள். அவர்கள் பேசுகையில்,
‘’திமுக ஆட்சி காலத்தில் 1971-76ல் நாவலர் நெடுஞ்செழியன், 1989-91ல் பேராசிரியர் க
அன்பழகன், 1996-2001ல் பேராசிரியர் க அன்பழகன், 2006-2011ல் தங்கம் தென்னரசு,
2021-2026ல் லியோலினி ஆகியோர் இருந்தனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது, ஆசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும்,
திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, பாடநூல் கழகத்தின் தலைவராக
செயல்பட்டு வந்தார். அவர் அடிப்படையில் ஆசிரியர் பணியாற்றியவர் என்பதாலே நியமிக்கப்பட்டார்.
ஆனால், அதிமுகவில் இந்த பதவி தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது.
கருணாநிதி மீதான காழ்ப்புணர்ச்சியால் வாரிய பதவியை கோட்டைக் குமார் என்ற ஒரு சாதாரண
நபருக்கு அந்த பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் வளர்மதிக்கு வழங்கினார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடநூல் கழகத்துக்கு
புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். நல்லவனோ, கெட்டவனோ, அறிவாளியோ, முட்டாளோ தன்னை நம்பி
வந்தவர்களுக்கு, தனக்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார் முதல்வர் விஜய். லயோலா
மணி என்று போட்டுக்கொள்வதால், இவரை லயோலா கல்லூரியின் ஓனர் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.
இனி, கல்வித் துறையில் சினிமா பாடல் இடம் பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை’’ என்கிறார்கள்.
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு பதவி. ஜோசியருக்கு பதவி. பாடிகார்டுக்குப்
பதவி. தனி உதவியாளர் ரூட் மாஃபியா ஜெகதீஷுக்கு
பதவி என்ற வரிசையில் லயோலா மணிக்கு கல்வித்துறை பதவி கிடைத்துள்ளது.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ..?