Share via:
மேகதாது அணை கட்டுவதில் மும்முரம் காட்டிவரும் கர்நாடக அரசு இப்போது,
காவிரி நீரை திறந்துவிடும்படி தமிழக அரசு கேட்கவில்லை என்று அதிரடி கிளப்பியிருக்கிறது.
அதோடு, கர்நாடக அரசு இப்போது ஓசூருக்கு அருகில் பிரமாண்டமான விமானநிலையம் அமைக்கும்
திட்டத்தில் இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி நீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின், ‘’கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன
அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய
முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த
5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக
தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து
தண்ணீர் திறக்கப்படவில்லை. மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத்
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க
வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க
வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன். இதற்கெல்லாம்
முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும்
கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின்
ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர்
கேட்டுப்பெற வேண்டும். எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம்
இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்..’’ என்று அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையத்தை ஓசூருக்கு
அருகில் அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்வது தமிழகத்தை அதிர வைத்துள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாட்டு அரசின் முயற்சியின்
போது பெங்களூரில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கிறது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.
ஆனால் இப்போது பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம், அதுவும் ஓசூருக்கு அருகிலே அமைக்க
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சி எடுத்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்ட தவெக அரசு, இந்த விமான நிலையத்தை
ஓசூருக்கு அருகில் தமிழகம் சார்பில் அமைக்க முன்வருமா அல்லது பெங்களூருக்கு தாரை வார்த்துவிட்டு
அமைதியாக இருக்குமா..?