Share via:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக ஆக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர்
விஜய் இன்று சட்டமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இதுகுறித்து பேசிய முதல்வர்
விஜய், ‘’தமிழ் வெறும் மொழி அல்ல; நமது உயிரும் அடையாளமும் ஆகும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கணமும் இலக்கியமும் கொண்ட தமிழ், இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் செம்மொழி.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாகப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும். இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கை அல்ல. ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கையும் அல்ல. ஒரு தமிழன் தனது தாய்மொழியில் நீதியைப் புரிந்துகொள்ளவும், அணுகவும், அனுபவிக்கவும் வேண்டும் என்பதற்கான ஜனநாயக உரிமைக் கோரிக்கை’’ என்று கொண்டுவந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கும் கோாிக்கையை மத்திய அரசும் குடியரசு தலைவரும் ஏற்க வேண்டும் மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை
வைத்திருக்கிறார்.
தமிழ் தான் எங்களை வளர்த்தது முதல்வர் விஜய் தமிழையே வளர்க்கிறார் என சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், ‘’இதுவரை
தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் கொண்டு வர வேண்டும் என்றுதான் பல
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் கேட்பது அதுவல்ல. தமிழை முதன்மை
மொழியாக நிலைநிறுத்திவிட்டு, அதற்குப் பிறகு தேவையான மற்ற மொழிகளை கொண்டு
வாருங்கள் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதுதான் முதல் முறையாக, தமிழை முதன்மை
மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக கொண்டு வந்து
செயல்படுத்தும் முயற்சி…’’ என்று கூறியிருக்கிறார்.

