Share via:
சட்டசபையில் அமைதியாக இரண்டு நாட்களும் அமர்ந்திருந்த முதல்வர்
விஜய் இன்று அவரது வழக்கமான பாணியில் விரிவாகப்பேசியது மட்டுமின்றி, ஸ்டாலினை கலாய்த்து
ஆக்ஷன் செய்த விவகாரம் வைரலாகிவருகிறது.
இன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று விரிவாக பதிலளித்துப்
பேசினார். அப்போது, “எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது…”
என்று குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் அவர், “அரசியல் பயணத்தைப் பற்றி பதிவு செய்ய விரும்புகிறோம். சூட்டிங்கில்
இருந்து நேராக சி.எம். ஆன மாதிரி பேசுறாங்க. அது ரீல்தான் ரியல் கிடையாது. நம்ம கேரியரில்
மேல வந்ததுக்கு விஜய் மட்டுமே காரணமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும்தான்
காரணம். கடவுளுக்கும்,
கடவுளுக்கு சமமான தமிழக மக்களுக்கு நன்றி.
தமிழக மக்களுக்கு எப்படி எல்லாம் துணையாக இருந்தோம்னு சொல்றேன்.
1990களில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்களுக்காக நின்றோம். 2008ல் ஈழத் தமிழர்களுக்கு
ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தோம்.
2009ல் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்கள் பணிகளை விரிவுபடுத்தினோம்.
வெள்ளக் காலம், கொரோனா, விழியகம், பயிலகம், நூலகம் எனப் பல வழிகளில் மக்களுக்குத் துணையாக
இருந்தோம்.
2011ல் நாகையில் மீனவர்களுக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம். 2018 ஸ்டெர்லைட் துப்பாக்கிச்
சூடு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். தவெக ஆரம்பித்தவுடன்
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டோம். விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில
மாநாட்டை நடத்தினோம். இந்தியாவிலேயே இரண்டு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட
ஒரே கட்சி தவெக. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடு இல்லை என வெளிப்படையாக
அறிவிச்சோம்.
பெரியாரின் கருத்துக்களை நிறைய ஏற்றுக் கொண்டோம். அம்பேத்கரின்
சமத்துவத்தைப் பின்பற்றுவோம் என அறிவித்தோம். வீரமங்கை வேலுநாச்சியாரின் மண் மீட்பைப்
பின்பற்றுவோம் என அறிவித்தோம். இதெல்லாம் புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பவர்கள்தான்
நம்மை நடிகர் என்று சொல்கிறார்கள். அரசியல் பயணம் வெளிப்படையாகத்தான் தொடங்கியிருக்கிறது.
கூட்டணியே இல்லாமல் தனியாக நின்று 35 சதவிகித வாக்குகளை வாங்கினோம்.
1.72 கோடி வாக்குகளோடு தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக வந்தோம்.
தமிழக மக்களின் ஆதரவால் தவெக ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கிறது. எங்களுடைய இரண்டரை ஆண்டு
பயணத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. நமக்கு மட்டுமே பல்வேறு நிபந்தனைகள், நெருக்கடிகள்,
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வெளியே சொல்ல முடியாத சூழ்ச்சிகளைத் தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்.
41 பேர் இழந்த வேதனையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மனசை விட்டு என்றைக்கும்
நீங்காத கொடுமையில் நம் மீதே பழியைப் போட்டதை மறக்கவே முடியாது.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களும், என் உயிருக்கு
உயிரான என்னுடைய தோழர்களும்தான் என்னுடைய பலம். 1967ல் அமைந்த அண்ணா, 1977ல் எம்.ஜி.ஆர்.
தலைமையில் அமைந்த சாமானியர்கள் ஆட்சி இன்று அமைந்திருக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பியிருக்கிறது.
தமிழக வரலாற்றில் ஒரு மகத்தான கூட்டணி ஆட்சியை நாம் அமைத்திருக்கிறோம்.
ஒரே ஒரு குடும்பம் மட்டும் முக்கியம்னு சொல்வது நம் ஆட்சியல்ல.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். 2026 தேர்தலில் மதத்தை, சாதியை,
காசு கொடுத்து வாங்குற நச்சுக் கலாச்சாரத்தை உடைத்துள்ளோம். சுத்தமான அரசு நிர்வாகத்தில்
உறுதியாக இருக்கிறோம்.
இப்பவும் சொல்றோம் இது வெறும் ஆரம்பம்தான். மக்களே நமக்குக் கொஞ்சம்
அவகாசம் கொடுங்க. ஒவ்வொரு துறையிலும் உள்ள ஏராளமான ஓட்டைகளை அடைத்து வருவோம். நமக்கு
எதிரா சேரவே மாட்டோம் என நினைத்தவர்கள் சேருகிறார்கள். நம்ம ஆட்சிக்குத் தேதி குறிக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார்கள்.
போதைப் பொருள் தடுப்புப் படை, டாஸ்மாக் கடைகள் மூடல், குறுவை சாகுபடி
சிறப்புத் தொகுப்பு, அம்மா உணவகங்கள் புதுப்பிப்பு, பத்திரப்பதிவுத் துறையில் பகல்
கொள்ளைக்கு முற்றுப்புள்ளி ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. கனிமவளங்கள்
கடத்துவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் அரசியல் தலையீடு இல்லாமல்
நடவடிக்கை. இதெல்லாம் சாம்பிள்தான் இன்னமும் இருக்கு” என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “இனி வரும் நாட்களில் லஞ்சம்,
ஊழல் இல்லாத பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தைத் தருவதுதான் ஒரே இலக்கு எனக் குறிப்பிட்டார்.
“எட்டு கோடி மக்கள் நம்ம கூட இருக்கும்போது ஏன் செய்ய முடியாது?
கடந்த ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அவர்களால்தான்
தமிழ்நாட்டில் தொல்லையோ தொல்லை. இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்துவிட்டு நமக்கு
ஆட்சி செய்யத் தெரியாது என சொல்கிறார்கள்.
எங்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்யத்
தெரிந்த அளவுக்கு மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாதுதான். பதவி உயர்வு
வழங்கவும், பணி மாற்றக் கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர, அதற்காகப் பணம் பறிக்கத்
தெரியாதுதான்.
புதிய பணியிடங்கள் உருவாக்கத் தெரியுமே தவிர அதனைப் பணத்திற்கு
விற்கத் தெரியாதுதான்? தங்கத்தை உருக்கித் தாரை வார்க்கத் தெரியாதுதான்.
அரசுப் பணத்தைத் தனிப்பட்ட கஜானாவுக்கு மாற்றத் தெரியாதுதான். போதைக்
கலாச்சாரத்தை வளர்க்கத் தெரியாததுதான்? ஓ.சி. பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ் இப்படியெல்லாம்
பேசத் தெரியாதுதான்? நாங்களும் எங்க மக்களும் வெரி வெரி ஹேப்பிதான். எதிர்ப்பவர்கள்
எதிர்க்கட்சி என்பதற்காக ஆட்சி மீது ஆயிரம் பழி போடலாம்.
மின்வெட்டை பொறுத்தவரை மின் மிகை மாநிலமாக இருந்தாலும் கடந்த கால
நிர்வாகக் குளறுபடிகளாலும், பழுதாலும், சிலரின் நடவடிக்கைகளாலும் மின் வெட்டிற்குக்
காரணமாக உள்ளது.
இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடைகளைச் சரி செய்வதில் பல்வேறு
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 77 புதிய மின் தடை நீக்க மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன,
விரைவில் மின் தடை முற்றிலும் நீக்கப்படும். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் சில
இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.
அதோடு இறுதியாக ஸ்டாலினைக் கலாய்த்து போஸ் கொடுத்தார். அதோடு சட்டமன்றம்
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
