Share via:
இன்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லிக்குச் செல்லும் முதல்வர் விஜய் அங்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை
சந்தித்து மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது.
இன்று விஜய் விடுத்திருக்கும் வாழ்த்துச்செய்தியில், ‘’இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது. உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
இன்று
சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழா டெல்லி ஐ.டி.சி மவுரியா நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிலையில் அதில் விஜய் பங்கேற்கிறார். இந்த விழாவில் டி.கே.சிவகுமார் வருகை தருவதால் விஜய் வருகை
முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேகதாது விவகாரத்தில் பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர்
டிகே சிவக்குமார், “மேகதாது திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. சட்டரீதியாக
எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” தெரிவித்த கருத்து தமிழகத்தில்
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமாரை ,தமிழக முதலமைச்சர் சந்திக்க திட்டமிட்டுள்ளார். சமீப நாட்களாக மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அது குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி சந்தித்து கொள்வார்கள் . உச்சநீதிமன்ற உத்தரவுப்படி
நடந்துகொள்ள வேண்டும் எனவும், தேவையற்ற மோதல் போக்கு வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வார்
என்று சொல்லப்படுகிறது.
அதனாலே, இன்றைய தினத்தில் பாஜக அமைச்சர்கள் யாரையும் சந்திக்காமல்,
இன்று இரவே சென்னைக்குத் திரும்புகிறார் விஜய். பேச்சுவார்த்தை மூலம் மேகதாது பிரச்னை
முடிவுக்கு வரட்டும்.

