Share via:
உயிரைப் பணயம் வைத்து காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த கோவில்பாளையம் காவல் நிலையத்
தலைமைக் காவலர் ம.வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.
அதோடு காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி
தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவின் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிறது கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சேலம் மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட 13 உயர் காவல்
அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த
ஜோஷி நிர்மல் குமார், சென்னை காவல் தலைமை அலுவலகத்தில் நவீனப்படுத்துதல் பிரிவின் ஐ.ஜி.யாக
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை மாநகரக் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி
வந்த பாபு, சேலம் மாநகரப் புதிய காவல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார். அதேபோல, சேலம்
சரக டி.ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ் ஹடிமணி, சென்னை காவல் உளவுப் பிரிவின் இணை ஆணையராகவும்,
லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த தேவராணி, சேலம் சரக டி.ஐ.ஜி.யாகவும் பணியிட
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரக் காவல்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த பத்ரி நாராயணன்,
சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகரப் பாதுகாப்புத் துணை
ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகரக் காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன் சேலம்
மாநகர வடக்கு துணை ஆணையராகவும், அங்குப் பணியாற்றிய அங்கித் சிங் சென்னை வண்ணாரப்பேட்டை
துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, சென்னை பரங்கிமலை துணை
ஆணையரான ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாகவும்,
அப்பொறுப்பில் இருந்த மதிவாணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில உள்துறை சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு உத்தரவின்படி, சென்னையில்
உளவுத்துறை ஐ.ஜி.பி. (IGP) பொறுப்பை வகிக்கவுள்ள அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ்., தமிழக காவல்துறையின்
உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவிக்கான முழு கூடுதல் பொறுப்பையும் ஏற்கிறார். மேலும்,
உளவுத்துறை தலைவர் பதவி டிஜிபி நிலையிலிருந்து கூடுதல் டிஜிபி நிலைக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும்
அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

