Share via:
இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல
செய்தி அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை
வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் அதிரடியாக
பாராட்டப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,
‘கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின்
பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை
இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும்
தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள
தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே, அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வதுயாதெனில்,
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு
சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும்
கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணில்
புகார் அளிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் நிரம்பிய பகுதியில் இடைத்தேர்தல் வருவதால், இந்த அறிவிப்பு
முக்கியத்துவம் பெறுகிறது.

