Share via:
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரிகள் 2 பேர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு&காஷ்மீர் அனந்தநாத் மாவட்டத்தில் உள்ள கரோல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூட்டாக இணைந்து கடந்த வாரம் (செப்.12 மற்றும் 13) தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் டி.எஸ்.பி. ஹுமாயுன், இந்தியாவைச் சேர்ந்த மேஜர் ஆஷிஷ் தோன்சாக் மற்றும் கர்னல் மன்பிரீத்சிங் ஆகிய 3 பேர் பயங்கரவாதிளின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்கள்.
உயிரிழந்தவர்களில் டி.எஸ்.பி.ஹுமாயுடன் பட், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் குலாம் ஹசன் என்பவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. திருமணமான இவருக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமான துப்பாக்கிச்சண்டை தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.