Share via:
அன்பில் மகேஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டதின் பின்னணியில் பல்வேறு
மர்மக் கதைகள் உலா வருகின்றன. சோதனையின் அடிப்படையில் பல திருப்பங்களும் சிக்கல்களும்
இருப்பதாகவும், இதில் உதயநிதி சிக்கவைக்கும் ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும்
சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப்
புகார் எழுந்த நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர
சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் ஏற்கனவே
கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போது
சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, பிற்பகல் 3.40 மணியளவில்
நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்
அன்பில் மகேஷ், “கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின்
அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார்
காலை 7.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை 10 மணி நேரத்துக்கும் மேலாக எனது வீட்டில்
சோதனை நடத்தினர். வீடு முழுவதும், அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பத்தாம் மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த ஆவணங்களையும், அனைத்து
மாவட்டங்களுக்கும் ஆய்வுக்காகச் சென்றபோது வைத்திருந்த ஆவணங்களையும் போலீசார் எடுத்துச்
சென்றுள்ளனர். வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். கண்டிப்பாக
நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.
சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசினால் அடுத்த நிமிடமே சோதனை நடத்துகிறீர்கள்.
முதலமைச்சர் ஹிட்லர் போல் இருக்கிறார் என்று நான் கூறியிருந்தேன். அவருடன் இருக்கும்
அமைச்சர்களும் பொய் சொல்வதையே வேலையாக வைத்துள்ளனர் என்றும் விமர்சித்திருந்தேன்.
ரூ.1,200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகக் கூறுகிறீர்கள். கஜானா காலியாக
இருப்பதாகவும் கூறுகிறீர்கள். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை
மருத்துவமனையாக முழுமையாகப் பயன்படுத்தாமல் ஆங்காங்கே பயன்படுத்தி வருகின்றனர். அதில்
சில கோடி ரூபாய் செலவு செய்தால் அதையே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் முகத்தில்
கரியை பூசும் தேர்தலாக அமைய வேண்டும் என்று நேற்று தாராபுரத்தில் பேசியிருந்தேன். இதுபோன்று
நான் தொடர்ந்து பேசி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சந்தேகத்தின் பேரில் இந்தச்
சோதனை நடத்தப்பட்டு, விவகாரத்தைத் திசைமாற்றும் முயற்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன்.
வரும் 18ம் தேதி ஆஜராகி பதில் அளித்துவிட்டு, நேராக தாராபுரம் சென்று தேர்தல் பணியில்
முழுமையாக ஈடுபடுவேன். இடைத்தேர்தலில் வெற்றியை கண்டிப்பாக நிலைநாட்டுவோம்.’’ என்று
பேசியிருந்தார்.
ஆனால், தவெகவினர் கரூர் சம்பத்தில் தொடர்புடையதாக செந்தில் பாலாஜி,
அன்பில் மகேஸையும் விஜய் சும்மா விட மாட்டார். கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் உதயநிதி
தொடர்பான சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் சம்மன் விசாரணையில்
பல்வேறு திடுக் தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள்.

