Share via:
அப்பாவைக் காணோம் என்று விஜய் கிண்டல் செய்தது முன்னாள் முதல்வர்
மு.க.ஸ்டாலினை கடுமையாக பாதித்துவிட்டது என்கிறார்கள். எனவே, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதற்குத் தயாராகிறார் என்று பேச்சு எழுந்துள்ளது.
இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதி என்பதால் விஜய்யுடன்
நேரடியாக மோதிப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும்
பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் வென்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர்
பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், அதிமுகவின் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ்.
ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியைச்
சேர்ந்த பி. சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா
ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக 5 தொகுதிகளும் காலியானதாக
அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளதால்
மொத்தம் 6 தொகுதிகள் தற்போதைக்கு காலியாக உள்ளன.
விதிப்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால், பொதுவாக 6 மாதங்களுக்குள்
இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அந்த அடிப்படையில், இந்த 6 தொகுதிகளிலும்
தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. மற்ற தொகுதிகளை விட விஜய் நின்ற
திருச்சி தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில்
இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்பதால் மூத்த நிர்வாகிகள் அவரை தேர்தலில் நிற்குமாறு
வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரம், விஜய்யும் இந்த தொகுதியில் தனது கட்சி மீண்டும் ஜெயிக்க
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான தொழில்நுட்ப
மற்றும் நிர்வாக ரீதியிலான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளின் செயல்திறனை ஆய்வு செய்யும்
பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம்
மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள விராலிமலை தொகுதிக்கான
இயந்திரங்களின் பரிசோதனை பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கிடையே, இந்த 6 தொகுதிகள்
இடம்பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் தேர்தல் தொடர்பான முழுமையான அறிக்கைகளை தேர்தல்
ஆணையம் கோரியுள்ளது.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை தங்களது
அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் களமாகவே பார்க்கின்றன. தற்போதைய சூழலில் தேர்தல் பணிகள்
வேகமெடுத்திருப்பதால், இடைத்தேர்தல் அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
விஜய்க்கு ஸ்டாலின் டப் கொடுப்பாரா..?
