Share via:
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும் என்று தலைமைக்கு கெடு விதித்த
காரணத்தால் வெளியேற்றப்பட்டவர் செங்கோட்டையன். இத்தனை நாட்களும் அவர் மீது எந்த குற்றச்சாட்டும்
வைக்காமல் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று எக்கச்சக்கமாக பேசியிருக்கிறார்.
கோபிச்செட்டி பாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’செங்கோட்டையன்
இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி
அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார்.
மரியாதை இல்லாத மனிதர். அனைவரது மனைவியும் புருஷன் நன்றாக இருக்க
வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அம்மா இருக்கும்போது அமைச்சராக இருந்தபோது
செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது,
கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு. நான் அப்போது கீழேதான் இருந்தேன்,
அம்மாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை
விட்டு இறக்கிவிட்டார்.
நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது
மனைவி, மகன் புகார் அளித்தனர். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது.
பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பாப்போச்சு என்றார்
அம்மா, இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை, இவரெல்லாம்
மோசமான மனிதர் என்றார் அம்மா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது
எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது
வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா? நீங்கள் முதல்வராக
இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள்
என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு
பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை
உங்களுக்கு இருக்கிறதா?
சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்துப் பேசியது
கிடையாது. இவரை வைத்திருக்கலாமா? இவர் மன்னிக்க முடியாத நபர். வாக்களித்த உங்களுக்கு
அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில்
வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள்
ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா..?
என் மீதும் கேஸ் போட்டனர், வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள்,
ஆனால், நான் வழக்கை நடத்துவேன் என்று சொல்லி நடத்தி, நிரபராதி என்று உங்கள் முன்பு
நிற்கிறேன். செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது
என்று பேசினால் ரோட்டில் நடக்க முடியாது, அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன், நீங்கள்
போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன்.
நீங்கள் எப்படியும் அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும்.
ஆட்சி மாறும், காட்சி மாறும், நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும், யாராவது சவுண்ட்
விட்டுப் பேசினால் கிட்டேயே போகமாட்டார்.
நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது, எனது முகம் ஒரு பக்கம்
தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை, நான் எதுக்கும் துணிந்தவன்.
ஸ்டாலின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவன் நான், என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல்
அவரே தடுமாறுகிறார். ஸ்டாலினுக்கு நீங்கள் துணை போனது தெரிந்தும் நான் பக்கத்தில் வைத்திருந்தேன்.
நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்தமாதிரி பேசக்கூடாது.
பல கோடி ரூபாய்க்கு எனக்கு மில் இருக்கிறதாம். அது என் சம்பந்தி ஃபேக்டரி. அதில் சண்டை
உண்டாக்க வேண்டாம். அவர் 1997ம் ஆண்டிலே கட்டி வைத்திருக்கிறார், இன்னொன்று என் மகனின்
சகலை. அவர் 1996ம் ஆண்டு கட்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை.
30 ஏக்கரில் கதிர் காலேஜ் எப்படி வந்தது..? வயதுக்கு ஏத்த மாதிரி
பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும். அவ்வளவு
பணம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டார். இவர் யாராவது
ஒருத்தரையாவது கட்சியில் சேர்த்திருக்கிறாரா? இவரால் வெளியேறியவர்கள்தான் அதிகம். முத்துசாமி,
சிந்து ரவிச்சந்திரன், மாவட்டச் சேர்மன், தோப்பு வெங்கடாசலம் என்று பலரை வெளியேற்றினார்.
யாரையும் வளர விட மாட்டார்..’’ என்று பேசியிருக்கிறார்.
செங்கோட்டையன் இதற்கு என்ன பதில் கொடுக்கப்போகிறார்…?