News

Follow Us

இந்தியாவை உலுக்கும் வகையில் கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் செக்ஸ் பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளன. இதற்கு அவரது தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் ம.ஜ.த. எம்எல்ஏவுமான ரேவண்ணா மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ரேவண்ணாவி போலீஸ் கைது செய்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் ம.ஜ.த.வின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா அதே தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார்

வரும் 26ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், பிரஜ்வல், பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த 2,976 ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தங்களது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ரேவண்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தேவகவுடாவின் வீட்டில் இருந்த ரேவண்ணாவை நேற்று மாலை 7 மணிக்கு கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரஜ்வலை பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவரை கைது செய்யக்கோரி பெங்களூரு, மைசூரு, ஹாசன் ஆகிய இடங்களில் காங்கிரஸாரும் மகளிர் அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link