Share via:
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற கூட்டணிக்
கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில், மேலும் இரண்டு புதிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக
அறிவிப்பு செய்தது, தலைவர்களை திகிலடைய வைத்துள்ளது.
விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்குத்
தேவையான இடங்கள் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின்
ஆதரவோடு முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
வகையில், சென்னையை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின்
முதலாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளை தவிர, காங்கிரஸ், விசிக, மதிமுக,
ஐயூஎம்எல் கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், ‘’ தவெக தலைமையில்
அமைய உள்ள கூட்டணிக்கு ஒரு பெயர் விரைவில் தெரியப்படுத்துவேன். தவெக ஆட்சி 6 மாதத்தில்
கலைந்து விடும் என ஒரு சிலர் பேசுகிறார்கள். ஆனால், இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள்
நீடிக்கும்.
தவெக தற்போது வலிமையான கட்சியாக மாறியிருப்பதால் இன்னும் இரண்டு
கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளனர். ஊழலற்ற, சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற
கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும். இதை காப்பதற்கு எத்தகைய சவால்களையும்
இந்த அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து இரண்டு கட்சிகள் வருகிறது என்றால் அது பாமகவும் தேமுதிகவும்தான்
என்று தெளிவாகத் தெரிகிறது. இது, தங்களுடைய முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று
காங்கிரஸ் கட்சியும் திருமாவும் திகில் அடைந்துள்ளனர். யாரை நம்பியும் இல்லாமல் தனி
ரூட்டில் பயணிக்க வேண்டும் என்பதாலே அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுகிறாராம் விஜய்.
இடைத்தேர்தல் வரை மட்டுமே கூட்டணிக் கட்சிகள் தேவைப்படும், அதன்பிறகு
தவெக தனி ரூட்டில் பயணிக்கும் என்கிறார்கள்