Share via:
புதிய தலைமுறை ஊடகத்தைச் சேர்ந்த விஜயனை விசாரணை என்ற பெயரில்
டார்ச்சர் செய்த விவகாரம் மீடியாவினரை மிரட்டியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஏ1 குற்றவாளியான திருநாவுக்கரசு கடந்த 1ம் தேதி
திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பத்திரிகையாளர்
ஒருவரோடு குதிரை பேரம் குறித்து பேசியதாகவோ “மேகாலயா ப்ரொஜெக்ட்” என்ற வார்த்தைகளையோ
காவல்தரப்பு நீதிமன்றத்தில் கூறவில்லை.
அப்படி இருக்கும்போது விஜயன் விசாரணைக்குக் காரணம் என்ன என்பது கேள்வியாக
எழுந்துள்ளது. நள்ளிரவில் மீண்டும் மீண்டும் அழைத்துச் சென்று, விதிமுறைகளை மீறி செல்போனைப்
பறித்து, மறுநாளும் மணிக்கணக்கில் தடுத்து வைத்திருப்பது பத்திரிகையாளர்களை மிரட்டி பத்திரிகை சுதந்திரத்தை
நசுக்கும் எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
பத்திரிகையாளர் என்றாலே பல்வேறு நபர்களிடம் பேசுவதும் செய்திகளை
சேகரிப்பதும் அவர்களது தொழில் சார்ந்த விவகாரம். அதற்காக அந்த நபர்கள் செய்யும் குற்றங்களுக்கு
எல்லாம் பத்திரிகையாளர்கள் பொறுப்பேற்க முடியுமா. இன்று விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படும்
பத்திரிகையாளர் விஜயன்; நாளை நம்மில் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
பத்திரிகையாளர்களை மிரட்ட விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் சர்வாதிகாரத்தை
கையில் எடுத்திருக்கிறது இந்த அரசு. சட்டப் பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு என்ற
எதுவுமின்றி இங்கு பத்திரிகையாளர்களாக வாழ்வதே சவால் தான். இத்தகைய அனைத்து சவால்களையும்
எதிர் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக பணியாற்றும் விஜயன் மீது தமிழ்நாடு
அரசும், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் விசாரணை என்ற
பெயரில் நடத்துவது அப்பட்டமான ஒடுக்குமுறை என்று பலரும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
இதெல்லாம் விஜய் ஆதரவாளர்களுக்கு ஒரு விஷயமே இல்லை. விஜய் க்யூட்டா
இருக்காரு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.