Share via:
திமுக ஆதரவாளர் என்று கருதப்பட்ட அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்
துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், திமுகவினர்
என்று தெரிந்தும் நியமித்து, அவரிடம் இருந்து சில முக்கிய தகவல்களை கறந்துவிட்டு, துறை
மாற்றம் செய்துவிட்டதாக விஜய் ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள்.
அருண் நியமிக்கப்பட்டதும் அரசு அலுவலகங்களில் ரெய்டு, லஞ்சப்பணம்
பறிமுதல், அதிகாரிகள் மீது வழக்கு என அதிரடியாக செயல்பட்டார். விஜய் அறிவுரையின் படி
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக பத்திர பதிவு
துறை, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அதிகமாக ரெய்டுகள் நடந்தன.
இந்த சூழலில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த மகேஸ்வரி அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது அருண் ஊனமச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசும் தவெகவினர், ‘’அருண் பற்றி நன்றாகத் தெரிந்தும்
அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பதவி கொடுக்கப்பட்டது. அவரும் விஜய் நம்பிக்கை
பெறவேண்டும் என்பதற்காக திமுக சீக்ரெட்ஸ் நிறைய சொல்லிவிட்டார்.
தவெகவுக்கு அவர் எவ்வளவு தொந்தரவு கொடுத்தார் என்று தெரிந்தும்
அந்தச் சூழலையும் தாண்டி, பழிவாங்கும் மனப்பான்மை இல்லாமல் அருணுக்கு மீண்டும் ஒரு
வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருந்தால், விஜய் நம்பிக்கையை
காப்பாற்றியிருப்பார்.
அவர் திமுக விசுவாசி என்பதை எ.வ.வேலு விஷயத்தில் காட்டி விட்டார்.
அவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததும் கைது செய்யத் திட்டம் என்று கூறப்பட்டது. அவரை
திட்டமிட்ட நாளுக்கு முன்னதாகவே வரவழைத்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பவிட்டார்.
இதையடுத்து அருண் ஒரு டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, மற்ற காவல் அதிகாரிகளுக்கும்
ஒரு பாடமாக இருக்கும். எங்க விஜய் அரசியல் சாணக்கியர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’
என்று சிலிர்க்கிறார்கள்.
அதேநேரம் சவுக்கு சங்கர் ஒரு புகார் கூறியிருந்தார். அதில், ’’குடியிருக்கும்
அபார்ட்மெண்டில் ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டை அருண் சொந்தமாக வாங்கியுள்ளார்.
அவருடைய மனைவி யமுனா தேவி ஒரு ஐஆர்எஸ் அதிகாரியாக இருப்பதால், அவருக்கும் ஒரு வீடு
ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருடைய வீடும் தனித்தனி வீடுகளாக இருந்தன. தற்போது,
அந்த ஐந்தாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்குச் செல்வதற்கு லிஃப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது அசோசியேஷனின் அனுமதி
பெறாமல் செய்யப்பட்டுள்ளதால்,விதி மீறல் என்று புகார் கூறப்பட்டது. அதோடு மனித உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் அதிகம்
வந்ததால் உடனடி பணி மாற்றம் நடந்தது’’ என்கிறார்கள்.