Share via:
தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திமுகவுக்கு
விஜய் அழைப்பு விட்டிருக்கும் நிலையில், விஜய்யை மத்திய அமைச்சரை சந்திக்க அழைத்திருக்கிறார்
கனிமொழி. அதேநேரம், கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுத்துவரும் மதிப்பு உயர்ந்துள்ளதாக திமுகவினரே
தெரிவிக்கிறார்கள்.
இன்று கனிமொழி, ‘’தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில்
எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக்
கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை
அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில்
நடத்திக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட
முன்வரைவை பாஜக. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும்
இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின்
நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச்
செய்தார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை
ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட
சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் – அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத
நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.
1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள்
தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி
அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்
என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய
சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின்
தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம்
செய்யக் கூடாது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழகம் எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த
ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத்
தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக
நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ்,
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச்
சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக்
கூட்டத்துக்கான தேவை என்ன?
ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம்
நடைபெற்று வருகிறது. மேகேதாட்டு அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட
வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும்
அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு
கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக்
கூட்டத்தைத் தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத்
திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள
தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
தமிழகத்தின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு
உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகேதாட்டு அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம்
நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி
அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழக அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழக அரசின்
சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழக முதல்வர் தயாரா? என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று துரைமுருகன் இதுகுறித்து தெளிவான விளக்கம்
கொடுத்துவிட்டாலும், கனிமொழிக்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் அவரை பேச வைத்திருக்கிறார்கள்.
கனிமொழிக்கு திமுகவில் மதிப்பும் மரியாதையும் உயர்கிறது என்று திமுகவினர் கூறுகிறார்கள்.