Share via:
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை
வரும் அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார்
உத்தரவிட்டுள்ளார். இது, லஞ்சம், ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு விஜய் தரும்
சவுக்கடி என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், எல்லா காலகட்டத்திலும் இதுபோன்ற சட்டங்கள்
நடைமுறையில் உண்டு என்றாலும், அவற்றை முழுமையாக யாரும் அமல்படுத்துவதில்லை. ஆனால்,
விஜய் துணிச்சலாக பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.
இன்று தலைமைச்செயலாளர் விடுத்துள்ள உத்தரவில், ‘’தமிழக அரசு ஊழியர்கள்
தங்களின் சொத்து மற்றும் கடன் உள்ளிட்ட பொறுப்பு விவரங்களை, வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள்
IFHRMS இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை தாக்கல் செய்யாதது,
தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சியின்போது, ஓய்வு பெற்ற நீதிபதி
ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், ‘அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று
மாதத்துக்குள் தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ‘பின், ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு முறையாக
அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில்தான், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, அரசு
ஊழியர்கள் சொத்து விபரங்களை, வீடுகள், நிலங்கள், நகைகள், கார், இருசக்கர வாகனங்கள்,
ரொக்கம், கடன் என, அனைத்து விபரங்களையும் அக்., 31க்குள், அரசு இணையதளத்தில் பதிவு
செய்ய உத்தரவிட்டு உள்ளது..
அதன்படி அனைத்து அரசு ஊழியர்களும், All India Service
Officers-ஐத் தவிர்த்து, 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி தங்களிடம் உள்ள
சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை IFHRMS இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கான கடைசி நாள் 2026 அக்டோபர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து மற்றும் பொறுப்புகளை மூன்று
பிரிவுகளாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஃபார்ம் 1 – அசையா சொத்துகள்:
நிலம், கட்டிடம், வீடு, பிளாட் உள்ளிட்ட அசையா சொத்துகளின் விவரங்கள்.
ஃபார்ம் 2 – அசையும் சொத்துகள்:
இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள், நகைகள், வங்கி வைப்புத்தொகை
உள்ளிட்ட அசையும் சொத்துகளின் விவரங்கள்.
ஃபார்ம் 3 – கடன் மற்றும் பிற பொறுப்புகள்:
அரசு ஊழியர்கள் பெற்றுள்ள கடன்கள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகள்
தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை தாக்கல் செய்திருப்பது,
பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்
சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை தாக்கல் செய்யாதது, தமிழ்நாடு அரசு பணியாளர்களின்
நன்னடத்தை விதிகள், 1973-ஐ மீறியதாகக் கருதப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி
அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை, அடுத்த ஆண்டு மார்ச்
31-ம் தேதிக்குள் IFHRMS மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யிடம் இருந்து யாரும் தப்பமுடியாது.

