Share via:
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் அமைப்பின் செயல்பாடுகள்
தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல்
வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் புறக்கணிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட
ஜாதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
பி.ஆர்.கவாய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம்
சர்ச்சையாகியிருக்கிறது.
கொலீஜியம் அமைப்பு ஒரு ஜாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக உச்ச
நீதிமன்ற முன்னாள் நீதிபதி கவாய் குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற கோலீஜியத்தின்
சமீபத்திய பரிந்துரைகள் தகுதி மற்றும் சமூக உள்ளடக்கத்தை முழுமையாக புறக்கணித்துள்ளது.
மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட
சமூகத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் 40 விழுக்காட்டிற்கு அதிகமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதுஇதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மையினர்,
பெண்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சாராத பொது பிரிவினர் நியமனங்களில் ஒதுக்கப்படுகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட
715 நீதிபதிகளில் 22 பேர் மட்டுமே பட்டியல் வகுப்பினர். 16 பேர் மட்டுமே பழங்குடியினர்.
89 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 37 பேர் மட்டுமே சிறுபான்மையினர்
என இந்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் 75 விழுக்காடு நியமனங்கள் பொது பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை இது
80 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக, சிறிய உயர்நீதிமன்றத்தில்
இருந்து பெரிய உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடினமாக உழைக்கும் நேர்மையான தலைமை நீதிபதி ஒருவர் சிறிய உயர்நீதிமன்றத்திற்கு
மாற்றப்பட்டுள்ளார்.
தண்டனை நடவடிக்கையாக தாய் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு
மாற்றப்பட்ட ஒரு நீதிபதிக்கு, பின், பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி
வழங்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்ட பிரிவு 124 (2)இன் கீழ் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசு
தலைவருக்கு உள்ளது.
கொலீஜியம் அமைப்பு பொறுப்புக் கூறலுக்கு அப்பாற்பட்டது அல்ல. நீதித்துறையில்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மையினர்,
பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி
செய்ய குடியரசுத் தலைவர் உடனே தலையிட வேண்டும் என்று தலைமை நீதிபதி கவாய் குடியரசு
தலைவர் கடிதத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்.
இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜகவைச் சேர்ந்த
இந்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், இதையெல்லாம் யாரும் மதிக்கவே மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.

