Share via:
பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை மாநில சிபிசிஐடி விசாரிப்பது
நியாயமான பதிலைத் தராது, இதில் நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று
எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப்
பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும்
நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான
நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?
பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது
வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள
நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ்,
பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என்
புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு
உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும்,
யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது
தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய
குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான
ஒரு குற்றச்சாட்டே போதுமானது’’ என்று கொதித்திருக்கிறார்.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ‘’தவறு நடந்திருப்பதை அமைச்சரே
ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள்
ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த
வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின்
சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு
நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் செண்ட்ர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை
கொடுத்திருக்க வேண்டும்.
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது
என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழனி
முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட
வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
விஜய் என்ன செய்யப்போகிறார்..?