Share via:
கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை
செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால்,
இருபதுக்கும் மேற்பட்டோரால் இரும்பு ராடு, கத்தி போன்ற ஆயுதங்களால் அடித்து கொடூரமாக
கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை, மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல்
என்று அமைச்சர் ராஜ்மோகன் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசுவதைக் கண்டித்து மாணவர்கள்
போராட்டம் செய்துவருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த
மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத்
தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் இன்னொரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமுதன் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போதைப்பொருள்
விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்ததாகவும், அந்தத்
தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்ததன் காரணமாகவே அமுதன் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும்,
அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு மாணவன் உண்மையைச் சொன்னதற்காகவே உயிரிழக்க வேண்டிய
நிலை என்றால், நாளை எந்த மாணவன் போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் கொடுக்கத் துணிவான்?
மாணவர்கள் கொடுக்கும் புகார்கள் ரகசியமாகக் காக்கப்பட
வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். இல்லையெனில், கல்லூரிகளுக்குள்
நடக்கும் போதைப் பொருள் விற்பனை, ராகிங், பாலியல் அத்துமீறல், வன்முறை என எந்தக் குற்றத்தையும்
மாணவர்கள் வெளியில் சொல்ல அஞ்சுவார்கள். எனவே, இந்தச் சம்பவத்தில் கொலை செய்தவர்கள்
மட்டுமல்ல, தகவல் எவ்வாறு கசிந்தது? யார் கசியவிட்டார்கள்? யாருடைய அலட்சியத்தால் ஒரு
மாணவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது? என்பதும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, மாணவன் அமுதனிடம் விசாரணை நடத்தியதாகக்
கூறப்படும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை
நடத்த வேண்டும்.
கல்லூரி வளாகத்துக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்
எப்படி நுழைந்தன? யார் விற்றார்கள்? யார் வாங்கினார்கள்? யார் பாதுகாத்தார்கள்? யார்
தகவலை கசியவிட்டார்கள்? யார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
விடை கிடைக்க வேண்டும்.
அமுதனுக்கு நீதி கிடைக்கட்டும்.