News

Follow Us

உலகம் முழுக்க கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால், அது  கிறிஸ்துமஸ்தான். ஆண்டுதோறும்  டிசம்பர் 25ம் தேதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, ‘கிறிஸ்ட் மாஸ்’ என்ற வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4வது நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்தவர்கள் விசேஷமாகக் கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகள் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முன்னொரு காலத்தில் ரோம் நகரத்தைச் சார்ந்த பாகன் இன மக்கள் சதுர்னாலியா என்னும் அறுபடை பெருந்திருவிழாவைக் கொண்டாடி வந்தனர். ஒருவார கால திருவிழாவானது டிசம்பர் 25ல் முடிவடையும்வரை எந்தவித குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. அப்போது அந்த நகரைக் கைப்பற்றிய கிறித்துவ பிரச்சாரகர்கள் இயேசுவின் பிறந்த நாளோடு சேர்த்து சதுர்னாலியா திருவிழாவை டிசம்பர் 25ம் தேதி கொண்டாட, பாகன் இன மக்களுக்கு அனுமதியளித்தனர். 

அடிப்படைரீதியாக இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25 என்று கூற எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதேநேரத்தில், இயேசு கிறிஸ்து பிறந்தபின் முதன்முதலில் கிறிஸ்துமஸ் தினம் கிபி 336ல்தான் கொண்டாடப்பட்டது. அதுவும் இப்போதுபோல கொண்டாட்டங்கள் இல்லை. இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முதலில் இத்தாலியில்தான் ஆரம்பமாகியுள்ளது. கிபி 336ல்தான் கிறிஸ்துமஸ் தினம் முதலில் கடைப்பிடிக்கப்பட்டாலும் கிபி1510 வரை கிறிஸ்துமஸ் மரத்தின் விதை அக்கொண்டாட்டத்தில் விதைக்கப்படவில்லை. 

கிறித்தவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பாகன் மக்கள், வனத்தை வணங்கியமையால் காடுகளில் இருக்கும் பைன் அல்லது ஓக் மர வகைகளை எடுத்து வந்து ஊரில் வைத்து வழிபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியுள்ளது. இப்படிக் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில், சான்டா கிளாஸ் என்னும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் இடம்பெற்றார். இவர், அந்த நாளில் சிவப்பு மற்றும் வெள்ளை உடை அணிந்து குழந்தைகளுக்கு பரிசளித்து இனிப்புகளை வழங்கி மகிழ்விப்பார். துருக்கியில் வாழ்ந்த துறவியான செயின்ட் நிக்கோலஸ் என்பவரே முதன்முதலாக சாண்டா கிளாஸாக வந்து குழந்தைகளை மகிழ்வித்திருக்கிறார். வாழ்க்கை முழுவதும் அன்புடன் பிறரை அரவணைத்து வந்த இவர், பாலியல் தொழிலுக்கு விற்கப்பட இருந்த பல பெண்களை அவர்கள் உறவினர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். இவரிடம் அனைத்து விதமான விளையாட்டுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் இருக்கும் எனச் சொல்லியே ஒல்லியாக இருந்த இவரை, பொம்மை நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய குண்டான விளம்பர மாடலாக்கினர். இவர் நல்ல குழந்தைகளுக்கு பரிசுகளையும். சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு கரித்துண்டையும் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.  

கிறிஸ்துமஸ் விழாவின்போது, கேக், பரிசுப்பொருட்கள், மரம், தாத்தாவைப் போன்று வாழ்த்து அட்டைகளும் முக்கிய இடம்பிடிக்கும். 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது. மேலும், இந்த பண்டிகையின்போது ஆண்டுதோறும் கிறிஸ்துவர்கள் குழுக்களாகச் சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை எடுத்துச் சொல்லியும் பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

இப்படி, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் உருவான  கிறிஸ்துமஸ் பண்டிகையானது, உலகம் முழுவதும்  பல கோணங்களில் விரிவடைந்தது. அதன் விளைவாக, 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்லநாளாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தங்கள் அடிமைகளைப் பரிசாக பரிமாறிக் கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழுச் சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. அதுபோல், சில காரணங்களுக்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் அன்று வீட்டை அலங்கரித்து, குழந்தை இயேசுவை வரவேற்று குடில் அமைத்து, கேக் வெட்டி மகிழ்கிறார்கள். அக்கம்பக்கத்தினருக்கும் இனிப்புகளைக் கொடுத்து மகிழ்கின்றனர். 

இயேசு மகானின் பெருமை பேசும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மகிழ்ச்சி எங்கெங்கும் பரவட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link