News

Follow Us

அவ்வப்போது சீமானை சீண்டும் வகையில் பேட்டிகள் கொடுத்துவந்த நடிகரும் இயக்குனருமான  அமீருக்கு சீமான் பகிரங்க ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் அவரது கட்சிக்குள் பூசலை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் பிறந்த பிரபாகரனை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ளலாம் என்று அமீர் கேள்வி எழுப்பியதற்கு, ‘நீ மட்டும் அரேபியாவில் பிறந்த நபியை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சீமான் கேட்டிருந்தார். எனவே, அவ்வப்போது உரசல்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் அமீர் நடித்திருக்கும் புதிய படத்துக்கு வெளிப்படையாக சீமான் ஆதரவு கொடுத்திருக்கிறார். சீமான அவரது அறிக்கையில், ‘’என்னுடைய ஆருயிர் இளவல் அமீர் அவர்களின் நடிப்பில், அன்பிற்கினிய தம்பி ஆதம்பாவா அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்டு ரசித்தேன். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு, தம்பிகள் பால முரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ள அழுத்தமான வசனங்கள் கூடுதல் பலம் சேர்க்கிறது. தம்பி அமீர் அவர்கள் நடித்துள்ளார் என்று சொல்வதை விடக் கதையின் நாயகன் பாண்டியனாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதகளப்படுத்தியுள்ளார்.

விறைப்பான தோற்றத்துடனும் கடுமையான முக பாவனைகளுடனும் திரையில் இதுவரை நான் கண்ட அமீரிலுருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறொரு பரிணாமத்தில் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள் என அனைத்திலும் ரசிக்க வைக்கும் தமிழ்த்திரையுலகின் புதிய நாயகனாக தம்பி அமீர் உருவெடுத்துள்ளது வியக்க வைக்கிறது. கதையின் நாயகி சாந்தினி தமது வெகு இயல்பான நடிப்பினால் ஈர்க்கிறார். நகைச்சுவை கலந்த அரசியல் படமாக மட்டுமில்லாமல், அப்பா மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ திரைப்படம் போல இத்திரைப்படமும் மக்களுக்குத் தேவையான ஆழமான செய்திகளைக் காட்சிகளின் மூலம் உணர்த்துவது பாராட்டுக்குரியது.

அரசியல் திரைக்கதை என்றாலும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் காதல் மனதிலும் நிறைந்து ரசிக்கும்படியான காதல் காட்சிகள் காண்பவர் கண்களைக் கவர்கிறது. அண்மைக்காலங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல், அரசியல், நகைச்சுவை என பல்சுவை படமாக மிளிர்கிறது ‘

மே-10 அன்று வெளிவரவிருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தினைத் திரையரங்குகளில் கண்டு களித்து, படத்தினை மிகப்பெரிய வெற்றியடையச் செய்ய வேண்டுமென உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி சம்பந்தமே இல்லாமல் அமீருக்கு சீமான் ஆதரவு கொடுத்திருப்பது ஏன் என்று புரியாமல் நாம் தமிழர் தம்பிகள் குழம்பியிருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link