Share via:
சினிமாவுக்கு என்று இருந்த அத்தனை இலக்கணங்களையும் உடைத்தெறிந்த ஒரு புரட்சியாளர் என்றால் அது, பாரதிராஜா மட்டும்தான். இந்த யுகத்தின் மகத்தான கலைஞன். சிவப்பாக இருப்பதுதான் சினிமாவுக்கு அடிப்படை தகுதி என்பதை அடித்து நொறுக்கியவர்.
பெண்களை தெய்வம் என்று கும்பிடும் தமிழ் சமூகம்தான், கள்ளிப்பால் ஊத்திக் கொலை செய்தது. அதனை தன்னுடைய திரைப்படம் மூலம் காட்டியதன் மூலம், அந்த கொடிய கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை பாரதிராஜாவை மட்டுமே சேரும்.
பாரதிராஜாவின் படங்களில் பெண்ணுக்கு தனிச்சிறப்பும் மதிப்பும் உண்டு. மயிலு, குயிலு, கருத்தம்மா, ஜெனிஃபர் டீச்சர் எல்லாம் ரசிகர்கள் மனதில் குடியிருப்பவர்கள். புதுமைப்பெண் படத்தின் மூலம் பெண்ணின் தனித்தன்மையைக் காட்டியவர்.
காதலை வசீகரப்படுத்தியவர் என்ராலும் அண்ணன் – தங்கை, தாய் பாசம், நட்பு என்று தமிழ் மக்களின் உணர்வுகளை தனது படங்களில் உயிரோட்டமாக பதிவு செய்தார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை தமிழ் சமூகத்தின் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஆவணங்கள்.
’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அவரது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸில் “பறவைகள் கூட்டில் வாழும் மான்கள்” என்ற ஒரு பகுதியை இயக்கி கலைக்கு வயதாவதில்லை என்று நிரூபித்தார்.
கலைஞன் மறையலாம் கலை என்றும் மறைவதில்லை என்பார்கள். என் இனிய தமிழ் மக்களே என்ற பாரதிராஜாவின் உயிர் மறைந்துவிட்டாலும், அவரது குரல் தமிழர்களின் இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இயக்குநர் மறையலாம். ஆனால் அவர் உருவாக்கிய காட்சிகள் மறைவதில்லை. ஒரு மனிதர் பிரியலாம். ஆனால் அவர் விதைத்த கனவுகள் அழிவதில்லை. சினிமா இருக்கும் வரையிலும் பாரதிராஜா இருப்பார்.

