Share via:
டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான
மோதல் முடிவுக்கு வந்தது போன்று தோன்றுவது உண்மையல்ல என்பதைச் சொல்லும் வகையில் ராமதாஸ்
மகள் ஸ்ரீகாந்தி புதிய இயக்கத்தை தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில்,
‘’சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் தவப்புதல்வி திருமதி. ஸ்ரீகாந்தி தலைமையில்,
புதியதோர் அரசியல் இயக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு.
சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை
அடித்தளமாகக் கொண்டு, மக்களின் நலன், உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றத்தை
இலட்சியமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் பயணம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
நிகழ்வில் தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்’’
என்று அழைப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒன்றிணைவோம்… புதிய வரலாறு படைக்கும்
இந்தப் பயணத்தில் கரம் கோர்ப்போம். இது நமக்கான அரசியல் நிகழ்வு மட்டுமல்ல… நமது எதிர்காலச்
சந்ததியினரின் உரிமை, சமத்துவம், சுயமரியாதை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும்
அரசியலுக்கு இன்று நாம் இடும் வலிமையான அஸ்திவாரம் என்றும் அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மகள்
ஸ்ரீகாந்தி ராமதாஸ், ‘’எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம் வரும் என்பார்கள் நம் முன்னோர்கள்.
அந்த வகையில், நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய அரசியல் பயணத்திற்கான
நேரம் இப்போது வந்துள்ளது.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மக்கள்
நலன் ஆகிய உயரிய கொள்கைகளைத் தனது வாழ்நாள் இலட்சியங்களாகக் கொண்டு பயணித்த மருத்துவர்
அய்யா அவர்களின் வழிகாட்டுதலும், அவர் நமக்குக் கற்றுத்தந்த கொள்கைகளும் என்றும் நமக்குத்
துணையாக இருக்கும். இந்தப் பயணம் என்னுடைய தனிப்பட்ட பயணமல்ல; நம் அனைவருக்குமான பயணம்.
நம்மவர்கள் நிறைவேற்றத் தவறியதை நாம் ஒன்றிணைந்து
நிறைவேற்றுவோம்.
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார
முன்னேற்றம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.
அரசியல் என்பது அதிகாரத்தை அடைவதற்கான பாதையாக
மட்டும் இல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பாக
இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான எண்ணம்.
எனக்கு நீங்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; என்
குடும்பத்தின் அங்கத்தினர்கள். உங்களின் அன்பும், நம்பிக்கையும், ஒற்றுமையுமே எனது
பலம். கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, புதிய நம்பிக்கையுடனும் உறுதியுடனும்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் இது.
இனி வரும் காலம் நம்முடைய காலம். இந்தப்
புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாக, வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நாம் அனைவரும்
ஒன்றுகூட இருக்கிறோம்.
என் அன்பு உறவுகள், பாட்டாளிகள் என அனைவரும்
திரளாகக் கலந்து கொண்டு, இந்தப் புதிய அரசியல் பயணத்தின் தொடக்கத்தைச் சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறேன்.
வாருங்கள்… சந்திப்போம்… ஒன்றிணைவோம்…’’
என்று அழைப்பு விடுத்துள்ளார்.
வன்னியப் பெருமக்களை நம்பி இன்னும் எத்தனை
பேர் புறப்படப் போறாங்களோ..?

