Share via:
இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபின்னர் முதல்வர்
விஜய். அதோடு பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்துவதற்கு உத்தரவு
போட்டுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா வீட்டில் அஞ்சலி செலுத்தியபிறகு விஜய் டெல்லிக்கு புறப்பட்டுச்
சென்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் ஏற்கனவே மே 27ம் தேதி முதன்முறையாக
டெல்லி சென்றிருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்துப் பேசினார்.
அந்தப் பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது குறித்து
அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக்
கூட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு வழங்கப்படாதது பேசுபொருளானது.
டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள
நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் நாட்டின் அனைத்து
மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பயணத்தின் போது சந்திக்காத குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத்
தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல்
காந்தி ஆகியோரை சந்திக்க இருப்பதாலே இந்த முறை டெல்லி பயணம் மூன்று நாட்களாக திட்டமிடப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
பயணத்தை நிறைவு செய்து ஜூன் 12ம் தேதி மாலை சென்னைக்குத் திரும்புகிறார்
விஜய். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று என்ன பேசப்போகிறார் என்பதுதான் இப்போது மிகப்பெரும்
கேள்வியாக உள்ளது.
