Share via:
துஷ்ட சக்தியை வீட்டுக்கு அனுப்புவோம், தூய ஆட்சியை கொண்டுவருவோம் என்று விஜய் சபதம் செய்தார். அதை அப்படியே மக்களும் நம்பி பெருவாரியாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள். ஆனால், மைனாரிட்டி ஆட்சியாக அமைந்துவிட்டது.
நல்லாட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்று வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டிருந்தால், விஜய்க்கு அதிமுக முழு ஆதரவு கொடுத்திருக்கலாம். ஆனால், தூய சக்தி விஜய்க்கு அதில் ஏனோ விருப்பமில்லை.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளை மட்டும் வளைத்துப் பிடித்தார். அதிமுகவை நேரடியாக அணுகாமல் பின் கதவை உடைத்து, எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் புத்தம்புதிய சோபா அரசியலை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திவிட்டார். முதலில் சோபா போகும், பின்னாடியே விஜய் போவார். இந்த குதிரை பேரம் இப்போது கவர்னர் வரை புகாராக போய்விட்டது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபிறகும், ‘இது குதிரை பேர ஆட்சி அல்ல, குதிரை வேக ஆட்சி’ என்று பஞ்ச் டயலாக் விட்டாரே தவிர, குதிரை பேரத்தை நிறுத்தவில்லை.
இப்போது அதிமுகவிலிருந்து நான்கு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைத்து, அங்கேயும் இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்துவிட்டார். இன்னும் பலரை விலை பேசுவதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஜெயித்து மெஜாரிட்டி ஆகிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்.
புத்தம் புதிய அரசியல் கட்சியாக இருந்தாலும், பாஜகவை விட மோசமாக ஆள் கடத்தல், சோபா பரிசு, குதிரை பேரம் என்று ஆரம்பமே கேவலமாக இருக்கிறது.
இதுதானா நீங்கள் சொன்ன தூய ஆட்சி விஜயண்ணா..?

