News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

திருச்செந்தூர், ஷீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்காவுக்கு விஜய் வரப்போவதாக அறிவிப்பு வெளியானது. நேற்றைய இரவு இந்த டிரிப் கேன்சல் என்று அறிவிக்கப்பட்டது என்றாலும், அதை நம்பாமல் வேளாங்கண்ணியில் ரசிகர்கள் குவிந்துவிட்டார்கள்.

விஜய் வரவில்லை என்றாலும் டிவிகே, டிவிகே என்று கத்தி கூப்பாடு போடுகிறார்கள். இதனால் திருப்பலி தள்ளிப்போயிருக்கிறது. எதற்காக விஜய் இப்படி ஒரு சுற்றுப்பயணம் செய்கிறார், ஏன் கேன்சல் செய்கிறார் என்றெல்லாம் விஜய் யாருக்கும் விளக்கம் கொடுப்பதே இல்லை. இந்த விஷயத்தில் விஜய் ஒரு ஆம்பிளை ஜெயலலிதா என்று கட்டுரை எழுதியிருக்கிறார் சமஸ்.

விஜய் நடவடிக்கை குறித்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சமஸ், ‘’1972இல் 55 வயதில் அதிமுக எனும் கட்சியை எம்ஜிஆர் கையில் எடுத்தார்; அதற்கு முந்தைய 20 ஆண்டு காலம் திமுகவில் முக்கிய தளகர்த்தராகச் செயலாற்றியிருக்கிறார். மிகவும் திட்டமிட்டு தன் அரசியலைக் கட்டமைத்ததோடு, கடும் உழைப்பையும் கொடுத்தவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டின் ஒரே மும்முறை தொடர் முதல்வர். ஒவ்வொரு தேர்தலிலும் சட்டமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே சென்றவர்.

அமெரிக்காவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு தேர்தலை வென்றவர். மறைந்து பல பத்தாண்டுகளாகும் சூழலிலும், இன்றைக்கும் மக்களிடத்தில் செல்வாக்கு செலுத்துபவர். ஆட்சியதிகாரம், வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு ஓர் அரசியல் கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர்; இந்திய அரசியலில் மக்கள் நலத்திட்டங்களின் முன்னோடி அவர்தான்.

எம்ஜிஆர் ஆவேசப் பேச்சாளர் இல்லை. பொதுக்கூட்டங்களில் கடுமையாகவோ அவதூறாகவோ அவர் பேசுவதில்லை. அவர் கையசைப்புக்கே மக்கள் கட்டுண்டு கிடந்தனர். ஜெயலலிதா அப்படி இல்லை. சுயாதீனமாகச் செயல்பட்டவர் என்றாலும், வாழ்க்கை நெடுகிலும் வெளியுலகத்துக்கும் அவருக்கும் இடையே யாரோ ஒருவர் பாலமாக இருக்க வேண்டியதாக இருந்தது; பின்னணியில் நிற்க வேண்டியிருந்தது. சிறு பிராயத்தில் அம்மா சந்தியா, இளமைக் காலத்தில் எம்ஜிஆர், பிற்காலத்தில் தோழி சசிகலா. பல லட்சம் மக்களை ஈர்த்தவர் என்றாலும், மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் பிரம்மாண்டமான சுவர் இருந்தது. சுவருக்கு அப்பால் உச்ச உயரத்தில் அவர் நிலைகொண்டிருந்தார்.

ஜெயலலிதாவின் வீடு எல்லோருக்கும் திறந்திருந்ததாக சொல்ல முடியாது. வீட்டில் அவரைச் சந்திக்கச் செல்பவர்களும், சந்நிதியில் நுழைவதற்கு முன் சம்பிரதாயக் கட்டாயங்களுக்கு ஆட்படுவது போன்று ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. பிற்காலத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அது செய்தியானது.

ஜெயலலிதா ஆவேசப் பேச்சாளர் மட்டும் அல்ல; அபாண்டமாகவும் பேசவும், பழி போடவும்கூட தயங்காதவர். கட்சியின் முக்கிய தலைவர்கள் வரிசையாக ஜெயலலிதா காலில் விழுவதும், அவர் முன் செல்லும் யாரும் குனிவதும் பிற்பாடு ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்தபோது, பெரும்பான்மை தமிழகப் பெண்கள் மனதார அதை ரசித்து அகம் குளிர்ந்தார்கள்.

விஜய் கூட்டங்களுக்கு வந்த பல பெண்கள் அவரைப் பார்த்த மாத்திரத்தில் உணர்வெழுச்சியில் குதித்ததையும், அவரைப் பற்றிப் பேச முற்படும்போதே கண்ணீர் விடுவதையும், இளைஞர்கள் ஆவேச கூச்சலிடுவதையும் பார்க்கும்போதெல்லாம், மைக்கேல் ஜாக்ஸன் நாட்கள் நினைவுக்கு வந்துபோனாலும், அரசியலைப் பொறுத்த அளவில், விஜய்க்கு முன்னோடி உள்ளூரிலேயே இருக்கிறார் என்றே கூற வேண்டியிருக்கிறது.

தனக்கு கூடும் கூட்டத்துக்குப் பொறுப்பேற்றவர் எம்ஜிஆர். கூட்டம் முடிந்ததும், “முதலில் குழந்தைகளுடன் வந்திருக்கும் தாய்மார்கள் வெளியேறட்டும்; அடுத்து இளம் பெண்கள் செல்லட்டும்; பிறகு ஆண்கள் வெளியேறட்டும்” என்று சொல்லும் அளவுக்குத் தொண்டர்கள் பாதுகாப்புக்கு உறுதியேற்றுக்கொண்டவர். கூட்டத்தை அணைத்துக்கொண்டவர்.

ஆனால், பொதுவெளியில் எல்லோருடனும் கை கோத்து நின்றாலும், கூச்ச சுபாவியாகவும் தனிமை விரும்பியாகவும் அளந்து பேசுபவராகவுமே இருந்தார் ஜெயலலிதா. தனக்காகக் கூடும் பிரம்மாண்ட கூட்டத்தால் பூரிப்பை அடைந்தார் என்றாலும், ஜெயலலிதா கூட்டத்தை அசூயையுடனேயே பார்த்தார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு ஜெயலலிதா நீராட சென்றபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 50 பேர் இறந்தபோது, துயர சம்பவத்துக்கும் ஜெயலலிதா அங்கு சென்றதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னது அவரது அரசு.

கரூரில் தன்னைப் பார்க்க வந்தவர்கள் 41 பேர் உயிரிழந்த பிறகு, குறைந்தபட்சம் அதற்கான தார்மிகப் பொறுப்பைக்கூட ஏற்க மறுத்தார் விஜய். தனிப்பட்ட வாழ்வில் ஜெயலலிதா போன்றே கூச்ச சுபாவி, தனிமை விரும்பி மட்டும் அல்லாது, விஜய்க்கும் பின்னரணாகவும் பாலமாகவும் வெளியுலகை அணுக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

அன்று எஸ்.ஏ.சந்திரசேகர்; இன்று ஜான் ஆரோக்கியசாமி. ஆண்டு நெடுகிலும் ஏனையோர் அரசியல் களத்தில் உழைத்துக்கொண்டிருப்பார்கள்; வெறும் அறிக்கைகள்; அடையாள நிமித்தமாக ஆர்ப்பாட்டங்கள்; ஆனால், தேர்தல் நெருங்கும் காலத்தில் களத்தில் காலடி எடுத்துவைத்து மொத்த ஓட்டுகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடுவார் ஜெயலலிதா. விஜய் நகருமிடமும் அதுதான்…’’ என்று எழுதியிருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link