News

Follow Us

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் கலைஞர் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் ‘க’ என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தின் இலச்சினையாக உள்ளது. ‘கலைஞர் எழிலோவியங்கள்’ என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை, கலைஞர் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் அவரது இறுதிப்பயண புகைப்படங்களும், ‘அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது.

உரிமை வீரர் கலைஞர்’ என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கலைஞர் உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு ‘3 டி’ தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது.

கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கலைஞர் பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது. ‘கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் ‘டிஜிட்டல்’ தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் சிந்தனை’ சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் ‘ஏ.வி.’ தொழில்நுட்பத்தில் கலைஞர் பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. மேலும் கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் ‘டிஜிட்டல்’ திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மினிதியேட்டரில் கலைஞர் வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், ‘இது கலைஞரின் தாஜ்மஹால்’ என்று வர்ணித்தார். அதேபோன்று கலைஞர் நினைவிடத்தை பார்த்த கவிஞர் வைரமுத்து, “கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன். கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு. இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால். ‘இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார். உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் உலகத் தரம் நன்றி தளபதி” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link