Share via:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி வருகிற திங்கட்கிழமை (செப்.18ம்தேதி) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு என தொடர்ந்து வார விடுமுறை நாட்களும் வருவதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை இந்தமுறை சிறப்பாக முன்கூட்டியே கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:&
வார இறுதி நாட்களான 16, 17 ஆகிய நாட்களுக்கு அடுத்ததாக விநாயகர் சதுர்த்தி 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்ல தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் (15ம்தேதி) கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, சேலம் போன்ற முக்கிய மாவட்டங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்காக 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த பணிகளை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் தங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடங்க ஆயத்தமாகியுள்ளனர்.