Share via:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம்
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும்
இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதையடுத்து விஜய் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 109 என்று அதிகரித்துள்ளது.
நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது தவெக அரசின் 4 மாத
கால ஆட்சிக்கான மார்க் ஷீட் என்று கருதப்பட்ட காரணத்தால், தவெக இந்த தேர்தலை தீவிரமாக
எடுத்துக்கொண்டது. முதலமைச்சர் விஜயும் கிராமம் கிராமாக ரோடு ஷோ, பரப்புரை என தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66 ஆயிரத்து 841 வாக்குகள்
பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யாவை
விட 9 ஆயிரத்து 471 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45 ஆயிரத்து
280 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.
அதேபோல மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம்
குமரவேல் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 20 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார். திமுகவின் பரந்தாமன் 2-ம் இடமும் அதிமுகவின் கணிதா சம்பத் 3-வது இடமும்
பிடித்தனர். இதனையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மரகதம் குமரவேல் தேர்தல் அதிகாரியிடம்
பெற்றுக் கொண்டார்.
தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவும் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம்
குமரவேலும் இன்று காலை சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர்
சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார்,
ராஜ்மோகன், செங்கோட்டையன் ஆகியோர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து
இருவரும் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.
அடுத்த மாதமே மீண்டும் ராஜினாமா செய்து காலியாக இருக்கும் 5 தொகுதிகளுக்கும்
இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தவெக
அசைக்கமுடியாத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

